இயேசு காட்டும் வழியில் வாழ்வோம்

வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும்? என்பது, வாழ்கிற ஒவ்வொருவரின் கைகளில் இருக்கிறது. இப்படித்தான் வாழ வேண்டும் என்றும் வாழலாம். எப்படியும் வாழலாம் என்றும் வாழலாம். ஆனால், நிறைவான மகிழ்ச்சி நமக்குக் கிடைக்க வேண்டுமென்றால், இயேசு காட்டுகிற ”இப்படித்தான் வாழ வேண்டும்” என்கிற கொள்கை தான், நமக்கு வழிகாட்டியாக அமைந்திருக்கிறது.

இந்த உலகத்தில் வாழக்கூடிய மனிதர்கள், அனைத்தையுமே ஒரே நேரத்தில் பெற்றுவிடத்துடித்துக் கொண்டிருக்கின்றனர். அனைத்தையும் பெற்றுவிட்ட பிறகு அதை எப்படி மகிழ்ச்சியாக வாழ்வது என்பது தெரியாமல் அலைந்து கொண்டிருக்கின்றனர். உதாரணமாக, பணம் சம்பாதிக்க வேண்டும் என்று நினைக்கின்றனர். அனைத்தையும் எவ்வளவு அதிகமாக சம்பாதிக்க வேண்டும், எவ்வளவு விரைவாக சம்பாதிக்க வேண்டுமோ அவ்வளவு விரைவாக சம்பாதித்தும் விடுகின்றனர். ஆனால், எந்த அளவுக்கு அதிகமாக, விரைவாகச் சம்பாதித்தார்களோ, அந்த அளவுக்கு அனுபவித்தார்களா? என்றால், நிச்சயமாக இல்லை. ஒரு பாத்திரத்தில் நமக்குப் பிடித்தமான உணவு இருக்கிறது. பல பேர் விருந்திற்கு வந்திருக்கிறார்கள். உடனடியாக, விரைந்து சென்று, நமக்குப்பிடித்த உணவை நமது தட்டில் நிரப்பி விடுகிறோம். நாம் நிரப்பிய அளவுக்கு, அதைச் சாப்பிட்டபோது, மகிழ்ச்சி அடைந்தோம் என்றால், நிச்சயமாக இல்லை. இயேசு காட்டுகிற வழி இதுவல்ல. அது நிறைவைத்தருகிற வழி. சுமையென்றாலும் சுகமான வழி. குறைவாக இருந்தாலும், நிறைவை உணரக்கூடிய வழி.

இந்த உலகப்போக்கில் நாமும் பல நேரங்களில், உள்ளவற்றில் நிறைவடையாமல், இல்லாதவற்றிற்கு ஆசைப்பட்டு, உள்ள நிறைவையும் இழந்தவர்களாக இருக்கிறோம். இருப்பதில் நிறைவு காண, இயேசு விடுக்கும் அழைப்பை ஏற்று, மகிழ்ச்சியோடு வாழக் கற்றுக்கொள்வோம்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

%d bloggers like this: