இயேசு தரும் மீட்பு

இயேசு எந்த அளவுக்கு சமுதாயத்தின் கடைசி நிலையில் இருக்கிறவர்களுக்கும், விளிம்புநிலையில் இருக்கிறவர்களுக்கும் உறுதுணையாக இருந்தார் என்பதை, லூக்கா நற்செய்தியாளர் தொடர்ந்து தன்னுடைய நற்செய்தியில் வலியுறுத்திக் கொண்டே இருக்கிறார். அந்த கருத்து தான், சக்கேயு நிகழ்ச்சியிலும் வெளிப்படுகிறது. காணாமற்போன ஆடு, காணாமற்போன நாணயம், ஊதாரி மைந்தன் உவமை, லூக்கா நற்செய்தியின் தனித்தன்மைக்கு சிறந்த உதாரணங்கள். சக்கேயு நிகழ்ச்சியும் இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு.

லூக்கா நற்செய்தியாளர் வரிதண்டுவோர்களிடத்தில் தொடக்கமுதலே தன்னுடைய நற்செய்தியில், அவர்கள் மீதான தனது பரிவை வெளிப்படுத்தி வருகிறார். 3: 12 ”வரிதண்டுவோரும் திருமுழுக்கு பெற வந்து, ”போதகரே, நாங்கள் என்ன செய்ய வேண்டும்?” என்று அவரிடம் கேட்டனர். 7: 29 ”திரண்டிருந்த மக்கள் அனைவரும், வரிதண்டுவோரும் இதைக்கேட்டு கடவுளுடைய நீதிநெறியை ஏற்று, யோவானிடமிருந்து திருமுழுக்கு பெற்றனர்”. 15: 1 ”வரிதண்டுவோர், பாவிகள் யாவரும் இயேசு சொல்வதைக் கேட்க அவரிடம் நெருங்கிவந்தனர்”. இயேசுவின் திறந்த உள்ளத்திற்கு, சக்கேயு மிகச்சிறப்பான பதில்மொழியைக் கொடுக்கிறார். தன்னிடம் இருப்பதை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள முன்வருகிறார். தானும் திறந்த உள்ளத்தோடு இயேசுவைப் பற்றிப்பிடித்துக் கொள்கிறார்.

திறந்த உள்ளம் என்பது இயேசுவை முழுமையாகப் பற்றிப்பிடித்துக்கொள்வதற்கான பண்பாக இருக்கிறது. யாரிடத்தில் நாம் திறந்த உள்ளத்தோடு இருக்கிறோமோ, இல்லையோ, இயேசுவிடத்தில் நாம் திறந்த உள்ளத்தோடு இருக்க வேண்டும். சக்கேயுவைப்போல நாமும் இயேசுவை நமதாக்கிக்கொண்டு, மீட்பைப் பெற்றுக்கொள்வோம்.

~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

%d bloggers like this: