”இயேசு, ‘மானிடமகன் வரும்போது மண்ணுலகில் நம்பிக்கையைக் காண்பாரோ?’ என்றார் (லூக்கா 18:8)

கடவுளிடத்தில் அசையாத நம்பிக்கை கொண்டு நாம் வாழ வேண்டும் என்பது இயேசுவின் போதனையில் மிக மையமான கருத்து. இங்கே நம்பிக்;கை எனப்படுவது பழைய மொழிபெயர்ப்பியல் ”விசுவாசம்” என அமைந்திருந்தது. இதையே பற்று, பற்றுறுதி எனவும் நாம் கூறலாம். கடவுளையே பற்றிக் கொள்வோர் வேறு பற்றுக்களால் பிணைக்கப்பட மாட்டார்கள். பிற பற்றுக்களிலிருந்து நாம் விடுதலை பெறுகின்ற வேளையில்தான் கடவுளிடத்தில் நாம் கொள்கின்ற நம்பிக்கை என்னும் பற்று பொருளுள்ளதாக மாறும். எனவே, இயேசு மண்ணுலகில் நம்பிக்கை எவ்வளவு நாள் தொடர்ந்து இருக்குமோ எனக் கேட்கின்ற கேள்வி நம் உள்ளத்தில் ஒரு சலனத்தை ஏற்படுத்த வேண்டும். இயேசு கூறிய உவமையில் வருகின்ற ”நேர்மையற்ற நடுவர்” மற்றும் அவரை அணுகிச் சென்று நீதிகேட்ட ”கைம்பெண்” ஆகியோரை (காண்க: லூக் 18:1-8) நாம் உருவகமாகப் பார்க்கலாம். அதாவது, அந்த நடுவர் அநீதியான ஓர் அமைப்பைக் காட்டிக் காத்தவர் எனலாம். நீதி வழங்கும் பொறுப்பை முறையாகச் செய்ய அவர் தவறிவிட்டார். அதிலும் குறிப்பாக, ஒரு கைம்பெண் தன்னைப் பல முறை அணுகி வேண்டிய பிறகும் அந்த நடுவர் நீதி வழங்க முன்வரவில்லை. இங்கே அநீதியான அமைப்பை எதிர்க்கின்ற பெண்ணாக அந்தக் கைம்பெண்ணை நாம் பார்க்கலாம்.

நீதி தேடி அலைந்து ஓயாமால் செயல்பட்ட அக்கைம்பெண் சமுதாய அமைப்புகளைக் கேள்விக்கு உள்ளாக்குகிறார். நேர்மையற்ற அதிகாரியை மீண்டும் மீண்டும் போய்ப் பார்த்து அவருக்குத் ”தொல்லை கொடுக்கிறார்”. ஏன், அந்த நடுவரின் ”உயிரை வாங்கிக் கொண்டேயிருக்கும்” அளவுக்கு அப்பெண் தொல்லை கொடுக்கிறார் (லூக் 18:5). கிரேக்க மூலத்தில் ”என்னை சித்திரவதை செய்கிறார்” என்னும் பொருள்படும் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆக, அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் என்றாற்போல, அக்கைம்பெண் விடாமுயற்சியோடு செயல்படுகிறார். அநீதிகள் நிலவும் சமுதாயத்தை மாற்றியமைக்க வேண்டும் என்றால் அது ஒருநாள் இருநாள் முயற்சியால் கைகூடும் இல்லை. பல மனிதரின் ஒத்துழைப்போடு தொடர்ந்து நடைபெறுகின்ற செயல்பாடு விடாமுயற்சியோடு நிகழும்போதுதான் வேரோட்டமான மாற்றங்கள் ஏற்படும். மேலும், அக்கைம்பெண் ”நாம் மனந்தளராமல் எப்பொழுதும் இறைவனிடம் மன்றாட வேண்டும்” (லூக் 18:1) என்பதற்கு ஒரு சிறந்த முன்மாதிரியாக உள்ளார். இறைவேண்டல் வழியாக நாம் நம்மை அன்புசெய்யும் கடவுளோடு நெருங்கி உறவாடலாம். அவருடைய ஆற்றலால் நம் வாழ்வில் புதிய திருப்பங்கள் நிகழும். நாம் கடவுளிடம் நிறைவான பற்றுக் கொண்டிருப்பதே இதற்கு உறுதியான அடிப்படை.

மன்றாட்டு
இறைவா, நேர்மையோடு நாங்கள் வாழ்ந்திட அருள்தாரும்.

~அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

You may also like...

Leave a Reply

%d bloggers like this: