இரட்டை நிலைப்பாட்டைக் களைய

லூக் 11 : 14-23

இன்றைய நற்செய்தியை வாசித்தவுடன் ஒரு நகைச்சுவைதான் நினைவுக்கு வந்தது. “உனக்கு வந்தா இரத்தம் எனக்கு வந்தா தக்காளிச் சட்னியா” என்ற நகைச்சுவை. இது சிரிப்பதற்கு மட்டுமல்ல சிந்திப்பதற்கும் நம்மை அழைக்கிறது. இதில் சிந்திக்க என்ன இருக்கிறதென்றால் நம்முடைய இரட்டை வேடம். இந்த வேடத்தை தேவைக்கு ஏற்றவாறு போட்டுக் கொள்கிறோம். தேவையில்லை என்றால் நாம் கழற்றி எறிந்து விடுகிறோம். இதனையே இன்றைய நற்செய்தியில் நம்மால் காணமுடிகிறது. பரிசேயர்கள் இயேசுவிடம் வந்து, ‘நீர் பேய்களின் தலைவரைக் கொண்டே பேய் ஓட்டுகிறீர்’ என்கிறார்கள். ஆனால் அவர்களைச் சார்ந்தவர்கள் செய்கின்ற வல்ல செயல்கள் அனைத்தும் கடவுளின் வல்லமையால் நடக்கிறது என்கிறார்கள். இதைத்தான் பலநேரங்களில் பரிசேயத்தனம் என்போம். இந்த இரட்டை நிலைப்பாட்டைக் களையவே இன்றைய நற்செய்தியும் தவக்காலமும் நம்மை அழைக்கிறது.

சில இரட்டை நிலைகள் :

  • நான் எதையாவது சாதித்தால் அது என்னுடைய திறமையினால் என்கிறேன். அதையே மற்றவர்கள் சாதித்தால் ஏதோ அதிர்ஷ்டத்தால் செய்து முடித்தான் என்கிறேன்.
  • எனது பிரச்சனைகளைப் பற்றிப் பேசும்போது நான் வழக்கறிஞர் ஆகிறேன். அடுத்தவர் பிரச்சனையிலோ உடனடியாக நான் நீதிபதியாகி விடுகிறேன்.
  • நான் திருப்பலிக்குச் செல்லாவிட்டால் உடல்நிலை சரியில்லை. அதுவே அடுத்தவர் திருப்பலிக்கு வரவில்லை என்றால் சோம்பேறித்தனம் என்கிறேன்.
  • நான் எது செய்தாலும் சாமர்த்தியமாகச் செய்கிறேன். மற்றவர்கள் எது செய்தாலும் அறிவு கெட்டத் தனமாகச் செய்கிறார்கள் என்கிறேன்.
  • நான் அலைபேசியை அர்த்தமுள்ள வகையில் எனது படிப்பிற்காகவே பயன்படுத்துகிறேன். மற்றவர்கள் அதைப் பொழுது போக்கிற்காகத் தவறாகப் பயன்படுத்துகிறார்கள் என்கிறேன்.

இன்னும் நம் அன்றாட வாழ்வில் எத்தனையோ இரட்டை நிலைப்பாடுகளை, இரட்டை முகமூடிகளைக் கொண்டு வாழ்ந்து வருகிறோம் . இதனைக் களைய அவரோடு இருப்பவர்கள் அவரின் துணையை இன்னும் அதிகமாக பெற வேண்டுவோம்.

– திருத்தொண்டர் வளன் அரசு

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: