இரவில் கூட என் மனச்சான்று என்னை எச்சரிக்கின்றது

திருப்பாடல் 16: 1 – 2a, 5, 7 – 8, 9 – 10, 11
”இரவில் கூட என் மனச்சான்று என்னை எச்சரிக்கின்றது”

கடவுள் எங்கே இருக்கிறார்? என்பது ஒவ்வொரு மனிதருக்குள்ளாக எழுகிற இயல்பான கேள்வி. தூணிலும் இருக்கிறார், துரும்பிலும் இருக்கிறார் என்று பொதுவாகச் சொல்வார்கள். உண்மையில் கடவுள் ஒவ்வொருவரின் இதயத்திலும் குடிகொண்டிருக்கிறார். அதைத்தான் நாம் மனச்சான்று என்று சொல்கிறோம். நாம் நல்லது செய்கிறபோது, நம்மையறியாமல் நம்மை நினைத்து பெருமைப்படுகின்றோம். நாம் தவறு செய்கிறபோது, அதனை விரும்பிச்செய்தாலும், நமக்குள்ளாக ஏதோ ஒரு நெருடல் ஏற்படுகிறது. அதுதான், உண்மையில் கடவுளின் குரல். அதுதான் உண்மையில் இறைவனின் ஒலி. அதைத்தான் இன்றைய திருப்பாடலின் வரிகளும் நமக்கு எடுத்தியம்புகின்றன.

தாவீது அரசர் பத்சேபாவுக்கு எதிராக தவறு செய்தார். அதை நிச்சயம் தெரிந்துதான் செய்தார். ஆனால், கடவுளுக்கு தெரியாது என்று நினைத்து செய்தார். அவரது உள்ளம் எச்சரித்திருக்க வேண்டும். அந்த எச்சரிக்கையை பொருட்படுத்தாது, தவறு செய்தார். அவருக்குள்ளாக ஓர் உறுத்தல் இருந்துகொண்டே இருக்க வேண்டும். அந்த உறுத்தலின் வெளிப்பாடு தான், நயவஞ்சகமாக பத்சேபாவை தன்னுடைய மனைவியாக ஏற்றுக்கொண்டது. செய்த பிரச்சனைக்கு பிராயச்சித்தம் செய்தாகிவிட்டது. இனிமேல் நம்மை யார் என்ன செய்ய முடியும்? என்ற மமதை அவருக்கு ஏற்படுகிறது. இதுவரை உள்ளிருந்த பேசிய இறைவன், மனச்சான்றின் வடிவில் பேசிய இறைவன், இறைவாக்கினர் வாயிலாகப் பேசுகிறார். இவ்வளவுக்கு தவறு செய்தாலும், இறைவனின் இரக்கத்தை எண்ணி மனம் உடைகிறார். அதையே பாடலாகவும் வடிக்கிறார்.

நமது வாழ்வில், கடவுள் நமக்குள்ளாக இருந்து எச்சரிக்கிறபோது, அந்த எச்சரிக்கை குரலுக்கு நாம் செவிமடுக்க வேண்டும். அதற்கு ஏற்ப நமது வாழ்வை மாற்றிக்கொள்ள வேண்டும். நமது வழிகளைத்திருத்திக் கொள்ள வேண்டும். இல்லையென்றால், அதற்கான பலனை, நாம் தான் அனுபவிப்போம்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

%d bloggers like this: