இருக்கிறதா, இல்லையா ?

இன்றைய நற்செய்தி வாசகம் (மாற்கு 8: 14-21) இயேசுவின் வாழ்வில் நடைபெற்ற ஒரு சிறிய, ஆனால் சுவையான நிகழ்வைச் சொல்கிறது. மாற்கு நற்செய்தியாளருக்கே உரிய தனித்தன்மைகளுள் ஒன்று இத்தகைய சிறு, சிறு தனித்தன்மை வாய்ந்த செய்திகளைப் பதிவு செய்திருப்பது.

படகிலே பயணம் செய்துகொண்டிருக்கும்போதுதான் சீடர்களுக்கு நினைவு வருகிறது தேவையான அப்பங்களை எடுத்துச்செல்ல மறந்துவிட்டார்கள் என்று. படகில் அவர்களிடம் ஒரேயொரு அப்பம் மட்;டுமே இருந்தது. அந்த ஒரு அப்பத்தைக் கொண்டு எத்தனை பேருக்கும் உணவளிக்கும் ஆற்றல் மிக்க ஆண்டவர் தம்முடன் இருந்ததை அவர்கள் மறந்துவிட்டார்கள் என்பதையும் மாற்கு இயேசுவின் வாய்மொழி வழியாகப் பதிவு செய்துள்ளார்.

இந்த நிகழ்வு இரண்டு பாடங்களைக் கற்றுத் தருகிறது:

1. நம்மிடம் என்ன இருக்கிறது என்று பார்க்காமல், என்ன இல்லை என்றே நாம் கவலைப்பட்டுக்கொண்டிருக்கலாம். அது தவறு. பிறரோடு நம்மை ஒப்பிட்டுப் பார்த்து, நம்மிடம் “அது இல்லை, இது இல்லை” என்று நாம் புலம்பிக்கொண்டிருக்கலாம். “இது இருக்கிறதே” என்று நிறைவும், மகிழ்வும் அடைய நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.

2. நம்மிடம் இருக்கும் சிறியவற்றையும் கொண்டு இறைவன் பெரிய செயல்களைச் செய்ய வல்லவர் என்பதை நாம் மறக்கக்கூடாது. வெறும் தண்ணீரைத் திராட்சை இரசமாக மாற்றியவர், ஐந்து அப்பங்களை ஐயாயிரம் பேருக்குப் பலுகச்செய்தவர், நம்மிடம் உள்ள எளியவற்றைக் கொண்டு பெரிய, மகத்தான வெற்றிகளைத் தருவார் என்று நம்புவோமாக.

மன்றாடுவோம்: ஆண்டவராகிய இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். எங்களிடம் இல்லாதததைப் பற்றிக் கவலைப்பட்டுக்கொண்டிராமல், இருப்பவற்றுக்காக நன்றி செலுத்தவும், இருப்பவற்றைக் கொண்டு பெரிய செயல்களை ஆற்ற உமது அருளையும் எங்களுக்குத் தந்தருளும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

~ பணி குமார்ராஜா

You may also like...

Leave a Reply

%d bloggers like this: