இருப்பதிலிருந்து கொடுத்தல்

இந்த உலகத்தில் பல மனிதர்கள், மக்களுக்கு குறிப்பாக ஏழை, எளிய மக்களுக்கு பல உதவிகளைச் செய்கிறார்கள். செய்யப்படுகிற உதவிகள் அனைத்துமே நல்ல மனதோடு செய்யப்படுகிறதா? என்றால், அது விவாதத்திற்கு உட்பட்டது. காரணம், இன்றைய அரசியல் உலகில் செய்யப்படுகிற உதவிகள் அனைத்துமே, இலாப நோக்கத்திற்காக மட்டுமே செய்யப்படுவதாக இருக்கிறது. உதவிகள் அனைத்துமே இரக்கச்செயலாக ஏற்கப்படுமா? என்றால், இல்லை என்பதைத்தான் இன்றைய நற்செய்தி வாசகம் பதிலாகத் தருகிறது.

நாம் உதவிகள் செய்வது சிறந்தது. ஆனால், எத்தகைய மனநிலையோடு செய்கிறோம்? என்பது, அதைவிட முதன்மையானது. ஆராயப்பட வேண்டியது. நாம் எவ்வளவு கொடுக்கிறோம்? என்பது முக்கியமல்ல. எப்படி கொடுக்கிறோம்? எந்த மனநிலையோடு கொடுக்கிறோம் என்பதுதான் முக்கியமானது. அதுதான் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படக்கூடியதாக இருக்கிறது. ஒருவேளை, இந்த உலகத்தில் இருக்கிற மக்களை நாம் ஏமாற்றிவிடலாம். அவர்களுக்குக் கொடுப்பதுபோல கொடுத்து, அவர்களிடமிருந்து அவர்கள் அறியாமல் நாம் பிடுங்கிவிடலாம். இன்றைக்கு பன்னாட்டு நிறுவனங்கள், மிகப்பெரிய நிறுவனங்கள் இந்த உத்தியைத்தான் கையாளுகின்றன. ஆனால், அதற்கான பதிலையும், விலையையும் அவர்கள் கொடுத்தே ஆக வேண்டும்.

இந்த மனநிலை மாற வேண்டும். இருப்பதிலிருந்து கொடுக்க மனம் வர வேண்டும். அன்னை தெரசா சொல்வார்: நாம் ஒன்றை கொடுக்கிறபோது, அது எனக்குள்ளாக வலியை ஏற்படுத்த வேண்டும் என்று. அதாவது, அதனைக் கொடுப்பதனால், நிச்சயம் அது நமக்கு இழப்பு தான். ஆனாலும், அதனை நாம் மற்றவர்களுக்குக் கொடுக்கிறோம் அதிகமாக இருப்பதிலிருந்து நாம் கொடுக்கிறபோது, அது நம்மை மிகவும் பாதிக்காது. நமக்கு இருப்பதிலிருந்து கொடுக்கிறபோதுதான், அது நமக்குள்ளாக மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.

– அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: