இரு மனநிலைகள்

மினாக்களைப் பற்றிய இயேசுவின் உவமை இருவிதமான மனநிலைகளை எடுத்துக்காட்டுகிறது. உயர்குடிமகன் தன் பணியாளர்களுக்கு பத்து மினாக்களைக் கொடுத்து அவற்றைக் கொண்டு வாணிகம் செய்யப் பணிக்கின்றார். சில காலம் கழித்து அவர் திரும்பி வரும்போது அவர்களில் பலரும் வாணிகம் செய்து ஈட்டியதைப் பெருமையுடன் அறிக்கை இடுகின்றனர். உயர் குடிமகன் அவர்களைப் பாராட்டுகிறார். ஈட்டியது எவ்வளவு என்று கணக்குப் பார்க்கவில்லை. அவர்களது நம்பிக்கைக்குரிய பண்பைப் பாராட்டுகிறார். ஒரே ஒரு பணியாளன் மட்டும் பணம் ஈட்டாதது மட்டுமல்ல, தம் தலைவரையே குறைசொல்லவும் துணிகிறார். நீர் கண்டிப்புள்ளவர், வைக்காததை எடுக்கிறவர், விதைக்காததை அறுக்கிறவர் என்று அவரையே தன் உழைப்பின்மைக்குப் பொறுப்பாளியாக்குகிறார். தலைவரோ அவருக்கு அவரது வாய்ச்சொல்லைக் கொண்டே தீர்ப்பளிக்கிறார்.

இரண்டாவதாக உள்ள மனநிலையைப் பலரிடமும் நாம் பார்க்கிறோம். ஒருவேளை நம்மிடம்கூட அந்த மனநிலை இருக்கலாம். பொறுப்புகளை ஏற்காமல், உழைக்காமல், உழைக்க மனமில்லாமல் வாழ்வதோடு, அதற்கான பொறுப்பையும் பிறர்மேல் சுமத்துகின்ற மனநிலையெ அது. ஆசிரியர் சரியில்லை, பள்ளி சரியில்லை, நாடு சரியில்லை, அதிகாரிகள் சரியில்லை… என்று குறை மட்டுமே கூறி, நமது கடமையைச் செய்யத் தவறுவது பெரிய குற்றம். அது இறைவனுக்கும், இந்த சமூகத்துக்கும் எதிரான பாவம். நமது குறைகளை ஏற்றுக்கொள்ளக் கற்றுக்கொள்வோம். இருப்பதைக் கொண்டு வாழ்வை வளப்படுத்தவும், நம்பிக்கைக்குரியவராய் வாழவும் பயிற்சி பெறுவோம்.

மன்றாடுவோம்: கொடைகளின் நாயகனே இயேசுவே, நீர் எமக்குத் தந்திருக்கிற பல்வேறு கொடைகளுக்காகவும் நன்றி செலுத்துகிறோம். இந்தக் கொடைகளைக் கொண்டு நாங்கள் உமக்கும், இந்த சமூகத்துக்கும் பெருமை சேர்க்க அருள் தந்தருளும். எங்களது தோல்விகளுக்குப் பிறர்மீது பழிபோடாமல், நேர்மையாக எங்களையே ஆய்வு செய்யும் ஞானத்தையும் எங்களுக்குத் தந்தருளும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

— அருள்தந்தை குமார்ராஜா

You may also like...

Leave a Reply

%d bloggers like this: