இறையரசின் மதிப்பீடுகளை வாழ முற்படுவோம்

தொடக்கத்தில் திருச்சட்டம் என்பது யூதர்களைப்பொறுத்தவரையில் பத்துக்கட்டளைகளும், முதல் ஐந்து நூல்களும் தான். ஆனால், கி.மு 4 நம் நூற்றாண்டில் மறைநூல் அறிஞர்கள் என்ற புதிய பிரிவினர் தோன்றி இந்த சட்டங்களுக்கு விளக்கம் கொடுத்து, அதையும் முக்கியமானதாக சட்டத்திற்கு இணையானதாக சித்தரிக்கிறார்கள். தொடக்கத்தில் வெறும் வாய்மொழியாக சொல்லப்பட்ட இந்த விளக்க உரைகள் பிற்காலத்தில் எழுத்து வடிவம் பெறுகிறது. இந்த திருச்சட்ட விளக்கநூலுக்கு மிஷ்னா என்பது பெயர். இந்த ஒழுங்குமுறைகளைப்பற்றி விவாதம்தான் இன்றைய நற்செய்தி நூலில் நாம் வாசிப்பது ஆகும்.

இன்றைய நற்செய்தியிலே கைகளை கழுவுவது மற்றும் பாத்திரங்களை கழுவுவது தொடர்பான ஒழுங்குகளை சீடர்கள் மீறிவிட்டதாகக்குற்றம் சாட்டப்படுகிறார்கள். யூதர்களைப்பொறுத்தவரையில் தூய்மை என்பது வெறும் சுகாதாரம் தொடர்பானது மட்டுமல்ல, அது ஒரு மதச்சடங்கு. சாப்பிடுவதற்கு முன்னதாக செய்யவேண்டியது, வீதிகளுக்குச்சென்று விட்டு வீடு திரும்பும்போது செய்ய வேண்டியது என பல்வேறு ஒழுங்குமுறைகளை அவர்கள் வகுத்திருந்தனர். அந்த சடங்குகளை செய்ய மறப்பதும், மறுப்பதும் கடவுளையே அவமதிக்கின்ற செயல் என்கிற அளவுக்கு, இந்த ஒழுங்குமுறைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வைத்திருந்தனர் மறைநூல் அறிஞர்கள். இயேசு இந்த ஒழுங்குமுறைகளுக்கு எதிரானவர் அல்ல, ஆனால் அவர் சொல்ல விரும்புவது: ஒழுங்குமுறைகள் கற்றுத்தருகிற மதிப்பீடுகளை கற்றுக்கொள்ளாமல், அதை வெறும் சடங்காக பிடித்துக்கொண்டிருக்கும் செயல் ஏற்கக்கூடியது அல்ல என்பதைத்தான்.

நாமும் கூட நம் அன்றாட வாழ்வில் பலவற்றை ஏன் செய்கிறோம்? எதற்காக செய்கிறோம்? என்ற சிந்தனையே இல்லாமல் வெறும் சடங்காக, சம்பிரதாயமாக செய்து கொண்டிருக்கிறோம். அந்த சடங்குகள், சம்பிரதாயங்கள் கற்றுத்தரும் மதிப்பீடுகளை பெரிதாகப்பொருட்படுத்துவதில்லை. அப்படிப்பட்ட நிலையிலிருந்து மாற்றம் பெற்றவர்களாக, மதிப்பீடுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்களாக மாறுவோம்.

அருட்பணி. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

%d bloggers like this: