இறைவனின் அன்பு

அன்பு தான் இந்த உலகத்தின் மொழி. அன்பு தான் நம்மை ஒன்றாக இணைக்கிற மொழி. அன்பு தான் இந்த உலகத்தில் எல்லாமே, என்பதனை நமக்கு உரக்கச் சொல்வது இன்றைய நற்செய்தி வாசகம். இந்த உலகத்தில் இருக்கிற ஒவ்வொருவருமே அன்பு செய்யப்பட விரும்புகிறோம். நாம் அன்பு செய்கிறோமோ, இல்லையோ, மற்றவர்கள் நம்மை நிர்பந்தமில்லாமல் அன்பு செய்ய வேண்டும் என்று விரும்புகிறோம். இந்த உலகத்தில் நம்மை அன்பு செய்கிறவர்கள் இருக்கிறபோது, அதன் ஆனந்தமே தனிதான். இந்த உலகத்தில் யார் நம்மை வெறுத்தாலும், நமக்கு அன்புகாட்டக்கூடிய இறைவன் இருக்கிறார் என்கிற ஆழமான செய்தி இன்றைய வாசகத்தின் வழியாக நமக்குக் கொடுக்கப்படுகிறது.

நம் மீது அன்பு காட்டக்கூடிய இறைவனுக்கு நமது வாழ்வில் நாம் முதலிடம் கொடுக்க வேண்டும். இறைவன் தான் நம் வாழ்வில், எல்லாமுமாக இருக்க வேண்டும். நாம் வாழ்வதும், இருப்பதும், இயங்குவதும் இறைவனுடைய அருளில் தான் என்பதை உணர வேண்டும். இறைவனின் பராமரிப்பு நமக்கு இல்லாவிடில் நாம் எப்படி இருப்போம்? என்பதை சிந்தித்தாலே, நமது வாழ்க்கை முழுவதுமாக மாறிவிடும். அந்த புரிதலை நமது வாழ்வில் கற்றுக்கொள்ள வேண்டும். இந்த உலகத்தில் இருக்கிற பலபேர், கடவுள் நம்பிக்கையற்றவர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கு கடவுள் நம்பிக்கையை நமது அன்பால் நாம் ஊட்ட வேண்டும்.

இறைவன் நம்மை அன்பு செய்கிறார் என்கிற உணர்வு நமக்குள் இருக்கிறபோது, நாம் பாதுகாப்பை உணர்கிறோம். அவரது பிரசன்னம் நம்மோடு இருக்கிறது என்பது, நமக்கு புலனாகிறது. அவரது அன்பையும், அடுத்தவரது நலனையும் எதிர்நோக்கி நாம் வாழ ஆரம்பிக்கிறோம். அத்தகைய நல்ல மனதை, இறைவனிடம் நாம் வேண்டுவோம்.

~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

%d bloggers like this: