இறைவனின் அருள்

இறைவனுடைய அருளைப்பெறுவது என்பது மிகப்பெரிய பேறு. அதற்கு ஈடுஇணை இந்த உலகத்திலே எதுவும் கிடையாது. அதற்கு மேல் பெறக்கூடிய சிறப்பு இந்த உலகத்திலே இல்லை. மரியாளுக்கு கடவுளுடைய வார்த்தை அறிவிக்கப்பட்டபோது, இத்தகைய மகிழ்ச்சி அவளுள் நிறைந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஏனென்றால், வானதூதர் அவளைப்பார்த்து, ”அருள்மிகப்பெற்றவரே!வாழ்க!” என்று வாழ்த்துகிறார். கடவுளுடைய அருளை அன்னை மரியாள் பெற்றிருக்கிறாள் என்பதுதான் இதனுடைய பொருள். ஆக, அந்த வார்த்தைகள் அன்னை மரியாளுக்கு சொல்ல முடியாத அளவுக்கு ஆனந்தத்தைக் கொடுத்திருக்கும். அதே வேளையில், கடவுளின் அருள் மற்றொரு அனுபவத்தையும் தாங்கியதாக இருக்கும். அதுதான் மரியாளின் இதயத்தை வாளாக ஊடுருவ இருப்பதாகும்.

கடவுளின் அருள் கொடுக்கப்படுவது பெற்றுக்கொண்டு வைத்திருப்பதற்கு மட்டும் அல்ல. அது வாரி வழங்கப்படுவதற்காக கொடுக்கப்படுகிறது. அதில், நாம் நமது வாழ்வை, தியாகம் செய்ய வேண்டியது வரலாம். இழப்புகளைச் சந்திக்கலாம். ஆனால், கடவுளின் அருளைப்பெறுவதற்கு, எதையும் இழப்பதற்கு தயாராக இருக்கிறேன் என்பதுதான், அன்னை மரியாளின் வாழ்வாக இருந்தது. இன்றைக்கு நற்செய்தியிலே, எலிசபெத்தம்மாளின் வயிற்றில் இருந்த குழந்தை, மரியாளின் வருகையை கண்டுணர்ந்தது. வயிற்றில் இருக்கக்கூடிய குழந்தை உணர்கிறது என்றால், எந்த அளவுக்கு அன்னை மரியாள் அருளால் நிரப்பப்பட்டிருந்தாள் என்பதை, நாம் புரிந்து கொள்ளலாம்.

நாமும் பல வேளைகளில் கடவுளின் அருளால் நிரப்பப்படுகிறோம். பெற்றுக்கொள்கிற அருளை, மற்றவர்களுக்கும் கொடுப்பதுதான், கொடுக்கப்படுவதின் நோக்கம். மரியாள் அதைச்செய்து முடிக்கிறாள். அதனால் வரக்கூடிய இழப்பையும் தாங்க முன்வருகிறாள். நமக்குக் கொடுக்கப்படுகிற அருளை நாம் எப்படி பாதுகாக்கிறோம்? பகிர்ந்து கொள்கிறோம்? சிந்திப்போம்.

~அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

%d bloggers like this: