இறைவனின் அளவற்ற அன்பு

யூதாசின் சதித்திட்டம் மிகவும் கொடூரமான ஒன்று. நடிப்பதில் அவன் கைதோந்தவனாக இருந்திருக்க வேண்டும். வெளிவேடத்திற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு. மற்ற சீடர்கள் மட்டும், யூதாஸ் செய்யப்போகிற காரியத்தைத் தெரிந்திருந்தால், அவனை உண்டு, இல்லையென்று ஆக்கியிருப்பார்கள். ஆனால், அவர்களுக்கு யூதாஸ் செய்யப்போகிற காரியம் தெரியவில்லை. மற்றவர்கள் அறியாதவண்ணம், உணராத வண்ணம் யூதாஸ் திறமையாக மூன்று ஆண்டுகளாக நடித்திருக்கிறான். அத்தனைபேரை ஏமாற்ற முடிந்த யூதாசால், இயேசுவை ஏமாற்றமுடியவில்லை.

யூதாஸ் செய்யவிருப்பது தவறு என்பதை உணரும் வண்ணம், அவனது தவறிலிருந்து திருந்துவதற்கு இயேசு உண்மையில் பல கட்ட முயற்சி செய்கிறார். எப்படியாவது தனது சீடன், இந்த தவறிலிருந்து தப்பித்துவிட வேண்டும் என்று நிச்சயம் ஆசைப்பட்டிருப்பார். ஆனால், யூதாஸ் தனது நோக்கத்தை நிறைவேற்றுவதில் தெளிவாக இருந்தான். அவனுடைய மனம், இயேசுவின் வார்த்தைகளைக் கேட்பதற்கு தயாராக இல்லை. இறுதியாக, தனது அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்த நிலையில், இயேசு யூதாசிடம் செய்ய வேண்டியதை விரைவாகச் செய்ய வேண்டிக்கொள்கிறார். அந்த வார்த்தைகள் நிச்சயம் இயேசுவைக் காயப்படுத்தியிருக்க வேண்டும்.

நாம் தவறான காரியங்களில் ஈடுபடுகிறபோது, நாம் செய்கிற காரியங்கள் தவறு என்பதையும், அந்த தவறிலிருந்து நாம் மீண்டு வர வேண்டும் என்பதையும், கடவுள் பல மனிதர்கள் வாயிலாக நமக்கு உணர்த்திக்கொண்டே இருக்கிறார். அதனை அறிந்து நமது வாழ்வை மாற்றிக்கொள்ள முன்வருமோம்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

%d bloggers like this: