இறைவனின் பிரசன்னம்

இயேசு செபிப்பதற்காக மலைக்குச் சென்றார் என்று நற்செய்தியாளர் சொல்கிறார். மலை என்பது விவிலியத்தில் உருவகமாகப் பயன்படுத்தப்படக்கூடிய வார்த்தை. பாலஸ்தீனத்தின் பூகோள அமைப்பும் இதற்கு ஒரு காரணமாகும். பாலஸ்தீனமும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளும் மலைப்பாங்கான இடங்களைக் கொண்டிருப்பதால், விவிலியத்தில் ஏறக்குறைய 500 க்கும் மேலாக, “மலை“ என்கிற வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஆன்மீகரீதியாக பார்க்கிறபோதும், மலை உயரமாக இருப்பதனால், அது கடவுளின் பிரசன்னத்தை வெளிப்படுத்தக்கூடிய வார்த்தையாகவும் இருக்கிறது. மலை என்பது உயரமான இடம். கடவுள் விண்ணுலகில் அதாவது மேலே வானத்தில் இருக்கிறார் என்பதால், மலை என்பது விண்ணகத்தின் அருகாமையைக் (கடவுளின் அருகாமை) குறிக்கிற சொல்லாக இருக்கிறது. ஆக, மலை கடவுளின் பிரசன்னத்தை அதிகமாக, நெருக்கமாக உணரக்கூடிய இடம் என்பதுதான், இங்கே நாம் அறிய வேண்டிய ஒன்று.

பழைய ஏற்பாட்லே சீனாய் மற்றும் சீயோன் மலைகள் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. சீனாய் மலையில் தான், மோசே கடவுளிடமிருந்து பத்துக்கட்டளைகளைப் பெற்றார். சீயோன் மலையில் தான் எருசலேம் ஆலயம் அமைந்திருக்கிற இடம். மாற்கு மற்றும் லூக்கா நற்செய்தியாளர்கள், இயேசு தன்னுடைய சீடர்களைத் தேர்ந்தெடுக்கிற இடமாக மலையைக் குறிப்பிடுகிறார்கள். எந்த ஒரு பணியையும் நாம் கடவுளின் பிரசன்னத்தோடு, அவருடைய ஆசீர்வாதத்தோடு தொடங்க வேண்டும் என்பதுதான், இதனுடைய பொருளாக இருக்கிறது. இயேசு தன்னுடைய பணிவாழ்வின் எல்லா செயல்களுக்கும், கடவுளின் ஆசீரையும் அருளையும் தேடினார். அந்த தேடல், நமக்கும் இருக்க வேண்டும்.

நமது வாழ்க்கையில் நாம் மலைகளை நோக்கி, தேடிச் செல்ல வேண்டியதில்லை. நமக்கு ஆலயங்கள் இருக்கிறது. அனுதினமும் ஒருமுறையாவது ஆண்டவரின் பிரசன்னத்தில் அமர்ந்து செபிப்பதற்கு இந்த நற்செய்தி நமக்கு அழைப்புவிடுக்கிறது. இறைவனை ஆலயத்தில் தான் வழிபட வேண்டுமா? என்று கேள்வி எழுப்பி, தேவையில்லாத வாக்குவாதத்தில் ஈடுபடுவதை விட, ஆண்டவரின் பிரசன்னத்தில் அதிக நேரத்தைச் செலவிட முயல்வோம்.

~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

%d bloggers like this: