இறைவனின் மன்னிப்பு

எண்ணங்களுக்கும் நமது உடல் ஆரோக்கியத்திற்கும் தொடர்பு உண்டு என்பது அனைவருமே ஏற்றுக்கொள்ளக்கூடிய உண்மை. நமது நினைவுகள் தான், நமது வாழ்வாக மாறுகிறது. இன்றைய நற்செய்தியில் வருகிற முடக்குவாதமுற்ற மனிதனின் வாழ்விலும், அவனுடைய குற்ற உணர்வு, அவனை இந்த நிலைக்கு ஆளாக்கியிருக்கிறது என்றால், அதுதான் உண்மை. யூதமக்களின் மனதில் பாவங்கள் தான், உடல் நோய்களுக்கு மூல காரணம் என்ற நம்பிக்கை இருந்தது. எனவே, உடல் நோயினால், குறிப்பாக, முடக்குவாத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் நிலைக்கு, பாவங்கள் தான் காரணம், என்று உறுதியாக நம்பினர்.

இன்றைய நற்செய்தியில் வரும், முடக்குவாதமுற்ற மனிதனுக்கு, தனது நிலைக்கு யார் காரணம்? என்பது தெரியாமல் இருந்திருக்காது. தனது பாவங்கள் தான், தன்னை இந்த நிலைக்கு தள்ளியிருக்கிறது என்பதை நிச்சயம் அவன் உணர்ந்திருப்பான். ஆனாலும், அவனால் ஒன்றும் செய்யமுடியவில்லை. தான் செய்த பாவத்திற்கு கடவுள் தண்டனை தந்திருக்கிறார். இதற்கு முடிவு கிடையாது, அதனை தான் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும், என்று தனது வாழ்வையே நொந்து கொண்டிருந்திருக்க வேண்டும். ஆனால், இயேசுவின் போதனை அவனுக்குள்ளாக நம்பிக்கையை ஏற்படுத்தியிருந்தது. கடவுளின் மன்னிப்பு அவனுக்கு புதியதாக இருந்தது. கடவுளை வெறும் தண்டிக்கக்கூடியவராக பார்க்கப் பழகியிருந்த யூதமக்களுக்கு, இயேசுவின் போதனை முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது. இதுவரை கடவுளை எதிரியாகப் பார்த்துக்கொண்டிருந்த அந்த முடக்குவாதமுற்ற மனிதன், முதன்முறையாக கடவுளின் அருளுக்காக, நம்பிக்கையோடு காத்திருப்பவனாக மாறுகிறான். கடவுளின் அருளைப்பெற்றுக் கொள்கிறான்.

கடவுளின் மன்னிப்பை நாம் அனைவரும் பெற்றுக்கொள்ள அழைக்கப்படுகிறோம். தாய்த்திருச்சபை பாவ மன்னிப்பு என்கிற அருட்சாதனைத்தை நமக்கு வழங்கியிருக்கிறது. எத்தனை பேர் இந்த அருள்சாதனத்தை முழுமையாக, முறையாகப் பயன்படுத்துகிறோம்? எந்த அளவுக்கு அந்த அருட்சாதனத்தின் மீது நம்பிக்கை உள்ளவர்களாக இருக்கிறோம்? சிந்திப்போம்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: