இறைவனின் வழிகாட்டுதல்

மனித வாழ்க்கையில் பயம் என்பது வாழ்வோடு கலந்துவிட்ட ஒன்றாக இருக்கிறது. தவறான ஒரு செயலில் ஈடுபடுகிறோம் என்றால், நம்மை அறியாமல் நமக்குள்ளாக ஒருவிதமான பயம் வரும். சரியான ஒன்றை, எதிர்ப்புகளுக்கு மத்தியில் நாம் துணிந்து செய்கிறபோதும், நமக்குள்ளாக பயம் வரும். ஆனால், இந்த இரண்டு பயத்திற்கும் இடையே மிகப்பெரிய வேறுபாடு இருக்கிறது. தவறான செயலுக்காக நாம் பயப்படுகிறபோது, நம்முடைய ஆன்மாவிற்கு அது மிகப்பெரிய இடறலாக மாறுகிறது. சரியான செயலை எதிர்ப்புகளுக்கு மத்தியில் செய்கிறபோது, நமக்குள்ளாக நமது ஆன்மா நம்மை அந்த பயத்திலும் ஈடுபட வைக்கக்கூடிய மிகப்பெரிய சக்தியாக இருக்கிறது.

இன்றைய நற்செய்தியில்(மாற்கு 10: 32-45) சீடர்களுக்குள்ளாக ஒருவிதமான பயம், கலக்கம். இதுவரை வாழ்க்கை நன்றாக சென்று கொண்டிருக்கிறது. மக்கள் மத்தியில் இயேசுவுக்கு மிகப்பெரிய செல்வாக்கு இருக்கிறது. அதிகாரவர்க்கத்தினர் இயேசுவை எதிரியாக நினைத்திருந்தாலும், மக்கள் அவரை மெசியாவாக பார்க்கத் தொடங்கியிருந்தார்கள். எனவே, அவர்கள் சென்ற இடங்களில் எல்லாம், சிறப்பான வரவேற்பு அவர்களுக்கு இருந்தது. இப்படி வாழ்க்கை மிக நன்றாக சென்று கொண்டிருக்கிறபோது, இயேசு தன்னுடைய முடிவைப்பற்றியும், அது நெருங்கிவிட்டது என்று, எருசலேமுக்கு போகிறவழியில் சொல்வது, நிச்சயம் அவர்களுக்குள்ளாக கலக்கத்தையும், கலகத்தையும் ஏற்படுத்தியிருக்கும். ஆனால், இயேசு நல்லவர். மக்களுக்கு வாழ்வு தரக்கூடியவர். அவரோடு நாம் எதற்கும் நிற்போம், என்று நிச்சயம் சீடர்களின் ஆன்மா, அந்த பயத்தின் நடுவில், கலக்கத்தின் மத்தியில் மிகப்பெரிய உந்துசக்தியாக இருந்திருக்கும் என்பதில் ஐயமில்லை.

நமது வாழ்வில் உண்மைக்கு துணைநிற்பதற்கு நாம் ஒதுங்கியிருக்க தேவையில்லை. நம்மால் இந்த தீமையை எப்படி எதிர்க்க முடியும் என்று ஓடி ஒளிய தேவையில்லை. இறைவன் நம்மை இயக்குவார். இறைவன் நம்மை வழிநடத்துவார். அந்த நம்பிக்கை சீடர்களுக்கு இருந்தது. அதே நம்பிக்கையை நாமும் வளர்த்துக் கொள்வோம்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: