இறைவனுக்கு கீழ்ப்படிவோம்

2அரசர்கள் 17: 5 – 8, 13 – 15, 18

வடக்கு மகாணத்தில் உள்ள, பத்து இனங்களும் வீழ்ந்து போகிற நிகழ்வுகளை இன்றைய வாசகம் நமக்கு எடுத்துக் கூறுகிறது. நெபாவின் மகனான் யெரோபாவின் தலைமையில் தொடங்கிய இந்த வடக்கு மகாண அரசு, 265 ஆண்டுகள் நீடித்தது. இந்த அதிகாரத்தின் முதல் ஆறு இறைவார்த்தைகள், இதன் அழிவைப்பற்றி நமக்கு விளக்குகிறது. அதற்கு பிறகான 25 வரை உள்ள வசனங்கள், அழிவுக்கான காரணத்தையும், கடவுள் அந்த அழிவைக் கொண்டு வந்ததை நியாயப்படுத்துவதையும், மற்றவர்களுக்கான எச்சரிக்கையாகவும் இது தருகிறது. அவர்களை அடக்கி ஆண்ட அரசுகளைப் பற்றி மற்ற இறைவார்த்தை நமக்கு எடுத்துச் சொல்கிறது.

இந்த பகுதியில் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கியமான பாடம், இறைவனுடைய வார்த்தைகளுக்கு நாம் செவிகொடுக்கவில்லை என்றால், அழிவு நிச்சயம் என்பதுதான். இறைவன் இந்த மனித இனத்தின் மீது மிகுந்த அன்பு கொண்டவராகவே இருந்திருக்கிறார். முதல் மனிதன் ஆதாமைப் படைத்தபோதும், வெள்ளத்திலிருந்து நோவாவைக்காப்பாற்றியபோதும், தொடர்ந்து இஸ்ரயேல் மக்களை தன் சொந்த இனமாக தேர்ந்தெடுத்தபோதும், அவர் அன்பு நிறைந்தவராக, அவர்களை தன் சொந்த பிள்ளைகளாக கருதுகிறவராகவே இருந்திருக்கிறார். ஆனால், மனிதன் எப்போதும் கடவுளுக்கு கீழ்ப்படியாமலேயே இருந்திருக்கிறான். அதன்பொருட்டு பல அழிவுகளைச் சந்தித்தபோதிலும், அவன் திருந்தியபாடில்லை என்பதைத்தான் இந்த பகுதி நமக்கு விளக்கிக் கூறுகிறது.

இன்றைக்கு நம்மை வழிநடத்துகின்ற பெரியவர்களுக்கு, அனுபவம் உள்ள நம்முடைய பெற்றோர்களுக்கு, பிள்ளைகளாயிருக்கிற நாம் செவிசாய்ப்பதில்லை. அதன்பொருட்டு பல துன்பங்களை நாம் சந்தித்தாலும், அந்த தவறை மீண்டும் மீண்டும் செய்து கொண்டே இருக்கிறோம். நம்முடைய வாழ்வில் இறைவனுக்கும், நம்மை வழிநடத்துகிறவர்களுக்கும் நாம் செவிசாய்க்க வேண்டும். அதுதான், நம் வாழ்க்கையை வளப்படுத்தும்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: