இறைவனை மகிமைப்படுத்துவோம்

யூதர்களைப்பொறுத்தவரையில் அவர்களின் விசுவாச வாழ்வு என்பது தலைமுறை, தலைமுறையாக பரிமாறப்படுவது. தொடக்கத்தில் கடவுள் திருச்சட்டத்தை மோசேக்கு கொடுத்தார். மோசே அதை யோசுவாவிடம் ஒப்படைத்தார். யோசுவா அதை இஸ்ரயேலரின் பெரியவர்களிம் ஒப்படைத்தார். இஸ்ரயேலின் பெரியவர்கள் வாயிலாக திருச்சட்டம் இறைவாக்கினர்களிடம் கொடுக்கப்பட்டது. இறைவாக்கினர்கள் மறைநூல் அறிஞர்கள் மற்றும் பரிசேயர்களிடம் ஒப்படைத்தனர். இயேசு வாழ்ந்த காலத்தில் விசுவாச வாழ்விற்கு பொறுப்பானவர்கள் இந்த மறைநூல் அறிஞர்களும், பரிசேயர்களும்தான். எனவேதான், இவர்கள் மக்கள் மத்தியில் மிகப்பெரிய மதிப்பையும், புகழையும் எதிர்பார்த்தனர். எந்த அளவுக்கு என்றால், தங்களை கடவுளுக்கு இணையாக காட்டிக்கொள்வதுபோல தோற்றத்தை ஏற்படுத்தும் அளவுக்கு தங்களை முன்னிறுத்தினர். இந்தப்பிண்ணனியில்தான் இயேசு இன்றைய நற்செய்தியில் இயேசு அவர்களுக்கு சாட்டையடி தருகிறார்.

பிரிந்து போன சபை சகோதரர் ஒருவர் கேட்டார்: நற்செய்தியிலே இம்மண்ணுலகில் உள்ள எவரையும் தந்தை என அழைக்க வேண்டாம் என்றிருக்கிறதே? எதற்காக குருக்களை, உங்கள் மக்கள் ‘தந்தை’ என்று அழைக்கிறாhகள்;? என்று. இன்றைக்கு சம்பந்தமில்லாத, தொடர்பில்லாத கேள்விகளைக்கேட்பதில் பிரிந்துபோன சபைக்கு நிகர் பிரிந்துபோனசபையினர் தான். அரைகுறை விவிலியம்கூடத்தெரியாமல், விவிலியத்தின் ஆழம்புரியாமல், ஏதோ மேலோட்டமாக இரண்டொரு வார்த்தைகளை மனனம்செய்துவிட்டு, தனக்கு விவிலியம் முழுவதும் தெரியும் என்பது போன்ற மமதை, இன்றளவும் பிரிந்துபோன சபையினரிடத்தில் இருப்பது வேதனைக்குரியது. இயேசு சொல்வதன் பொருளை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். இயேசு மறைநூல் அறிஞர்களுக்கும், பரிசேயர்களுக்கும் இதைச்சொல்கிறார். காரணம்: அவர்கள் தங்களை கடவுளுக்கு நிகரானவர்களாக காட்டிக்கொண்டார்கள். எனவேதான், பந்தியிலும், தொழுகைக்கூடங்களிலும் முதன்மை இருக்கைகளையும், மக்களால் தங்களுக்கு அனைத்து மரியாதையும் கொடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். இதைத்தான் இயேசு கண்டிக்கிறார்.

நம்முடைய வாழ்வு கடவுளை மகிமைப்படுத்த வேண்டுமே தவிர, நம்மையே மகிமைப்படுத்துவதாக இருக்கக்கூடாது. தூய இஞ்ஞாசியாரின் ‘எல்லாம் இறைவனின் அதிமிகு மகிமைக்கே’ என்கிற விருதுவாக்கு இதற்கு சிறந்த உதாரணம். தூய பவுலடியாரைப்போல, நாம் வாழ்ந்தாலும், இறந்தாலும் கிறிஸ்து மகிமை பெறட்டும், என்ற எண்ணம் நமக்குள்ளாக மேலோங்கியிருக்கின்றபோது, கடவுள் நம்மை உயர்த்துவார்.

~அருட்பணி. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

%d bloggers like this: