இறைவனோடு கொண்டிருக்கிற உறவு

திருத்தூதர் பணி 13: 44 – 52
இறைவனோடு கொண்டிருக்கிற உறவு

யூதர்களில் பெரும்பாலானவர்கள் பவுலையும், திருத்தூதர்களின் போதனையையும் ஏற்றுக்கொள்ளவில்லை. பலர் மனந்திரும்பி, இயேசுவை மீட்பராக ஏற்றுக்கொண்டாலும், அதிகாரவர்க்கத்தினர் அவர்களை நம்பவில்லை. எந்தெந்த வழியில் அவர்களுக்கு இன்னல்களை தர முடியுமோ, அத்தனை வழிகளிலும் அவர்கள் முயற்சி எடுத்து, அவர்களை தடை செய்ய பார்த்தார்கள். அதிகாரவர்க்கத்தினரின் இந்த மிரட்டல்களைக் கண்டு, சீடர்கள் பயப்படவில்லை. ஒளிந்து ஓடவுமில்லை. அதிகாரவர்க்கத்தினரை துணிவோடு எதிர்த்து நின்றனர். ”கடவுளின் வார்த்தையை உதறித்தள்ளி, நிலைவாழ்வுக்குத் தகுதியற்றவர்கள் என்று உங்களுக்கு நீங்களே தீர்ப்பளித்துக் கொண்டீர்கள்” என்று பவுல், யூதர்கள் முன்னிலையில் துணிவோடு பேசுகிறார்.

இவ்வளவு எதிர்ப்புகளுக்கு நடுவிலும், சீடர்கள் கலக்கமுறவில்லை. அவர்கள் மகிழ்ச்சியோடு வாழ்ந்தனர். ”சீடர்களோ தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு மகிழ்ச்சியில் திளைத்திருந்தனர்”. அவர்கள் கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவிக்க எவ்வளவோ இன்னல்களை அனுபவித்தபோதிலும், மிகுந்த மகிழ்ச்சியோ வாழ்ந்தனர். இறைவன் அவர்களோ இருக்கிறார் என்கிற ஆழமான விசுவாசம் தான், அவர்களுக்கு இந்த மகிழ்ச்சியைத் தந்தது. கவலை வருகிறபோது நாம் வெகு எளிதாக துவண்டுவிடுவோம். ஆனால், இவர்கள் துன்பங்களுக்கு நடுவில் மகிழ்ச்சியோடு வாழ்ந்தனர். அந்த மகிழ்ச்சியை அவர்கள் இழந்து விட விரும்பவில்லை. இன்னும் அதிக ஆர்வத்தோடு, இறைவனோடு தாங்கள் கொண்டிருந்த நம்பிக்கையில் உறுதிபெற்றனர்.

இறைவனோடு நாம் கொண்டிருக்கிற நம்பிக்கை மிக மிக முக்கியமானது. அந்த நம்பிக்கை ஆழமாக இருக்கிறபோதுதான், நம்மால் மகிழ்ச்சியாக வாழ முடியும். துன்பங்களை எதிர்த்து உறுதியாக போராட முடியும். எத்தகைய இன்னல்கள் வந்தாலும், எதிர்த்து நிற்க முடியும். இறைவனோடு நாம் கொண்டிருக்கிற உறவை பலப்படுத்த முயற்சி மேற்கொள்வோம்.

– அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

%d bloggers like this: