இறைவன் கொடுத்த வாழ்வு

கடவுள் கொடுத்த இந்த அழகான வாழ்வை எப்படி வாழப்போகிறோம்? என்பதை நிர்ணயிக்கப் போவது நாம் தான். இந்த வாழ்வை எப்படியும் வாழ்வதற்கு, கடவுள் நமக்கு முழுச்சுதந்திரத்தைத் தந்திருக்கிறார். நம் முன்னால் இரண்டு வழிகள் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். இரண்டுமே, நாம் செல்ல வேண்டிய இலக்கை அடையக்கூடிய வழி என்றால், நாம் எதைத் தேர்ந்தெடுப்போம்? எது ஆபத்தில்லாத வழியோ, எது நமக்கு கஷ்டம் தராத வழியோ, அதைத்தான் தேர்ந்தெடுப்போம். ஒருவேளை, மற்றொரு வழி துன்பம் தருகிற வழி என்று நினைத்துக்கொள்வோம். அந்த துன்பம் தருகிற வழியில் நாம் ஒரு புதிய பாதையை உருவாக்கினால், அதனால், பல மக்கள் பயன்பெறுவார்கள் என்றால், நமது துன்பத்தைப் பார்ப்போமா? அல்லது, நமது துன்பத்தால் பயன்பெறக்கூடிய மக்களை நினைத்துப்பார்ப்போமா? இதில் தான், நாம் நமது வாழ்வை எப்படி வாழப்போகிறோம் என்பதன் இரகசியம் அடங்கியிருக்கிறது.

இந்த உலகத்திலே எத்தனையோ கோடிக்கணக்கான மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள். அவர்கள் அனைவருமே நமது நினைவில் இருக்க முடியாது. ஏனென்றால், அவர்கள் தங்களது வாழ்வை, தங்களுக்காக வாழ்ந்தவர்கள். கோடிக்கணக்கான மக்கள் வாழ்ந்தாலும், ஒரு சிலரை நாம் நினைவுகூர்கிறோம். காரணம், அவர்கள் தங்களது வாழ்வை, தங்களுக்காக வாழாமல், மக்கள் வாழ்வு பெற வேண்டும் என்பதற்காக வாழ்ந்தவர்கள். அவர்களைத்தான் இந்த உலகம் நினைவுகூர்கிறது. அவர்களைத்தான் பெருமையோடு, இந்த உலகம் பார்க்கிறது. அத்தகைய வாழ்வு தான் இயேசுவுக்கு பிடித்தமான வாழ்வு. அந்த வாழ்வு தான், உண்மையான சீடத்துவ வாழ்வு.

நமது கிறிஸ்தவ வாழ்க்கையில், மற்றவர்கள் வாழ்வதற்காக நமது வாழ்வை தியாகமாக்குவதுதான், உண்மையான சீடத்துவ வாழ்வு. அந்த வாழ்வைத்தான் நாம் அனைவருமே வாழ்வதற்கு, அழைக்கப்படுகிறோம். அத்தகைய வாழ்வு வாழும்போது, இயேசுவின் அரவணைப்பு நிச்சயம் நமக்கு கிடைக்கும்.

~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

%d bloggers like this: