இறைவன் வழங்கும் கொடைகள்

திருத்தூதர் பணி 1: 15 – 17, 20 – 26
இறைவன் வழங்கும் கொடைகள்

இறைவன் நமக்கு பல அருள்வரங்களை வழங்குகிறார். ஆனால், அந்த அருள் நம்மிடம் தங்கியிருப்பதற்கு ஏற்ற வாழ்க்கையை நாம் வாழாவிட்டால், நிச்சயம் அது நம்மிடமிருந்து எடுக்கப்படும். அதுதான் யூதாசின் வாழ்க்கையில் நடந்திருப்பதாக, முதல் வாசகம் நமக்கு எடுத்துக்கூறுகிறது. யூதாஸ் அடிப்படையிலே எப்படிப்பட்டவன் என்பதை ஒருவர் உறுதியாகச் சொல்ல முடியாது. ஆனாலும், அவனுக்கு கடவுளின் நிறைவான அருள் வழங்கப்பட்டது. இறைவனுடைய மகன், தனக்கு பின்னால் தொடரப்பட இருக்கிற புனிதமான பணிக்கான கருவியாக அவரைத் தேர்ந்தெடுக்கிறார்.

பெற்றுக்கொண்ட அழைப்பிற்கேற்ப வாழ வேண்டிய யூதாஸ், அதனை உதாசீனப்படுத்திவிடுகிறான். அந்த இழப்பு மற்றவர்களால் அவனுக்கு நேர்ந்ததல்ல. அவனுடைய நிலைக்கு அவன் வேறு யாரையும் குற்றம் சுமத்த முடியாது. அந்த இழப்பு மற்றொருவருக்கு ஆதாயமாக முடிகிறது. மத்தியா என்கிறவர் யூதாசின் இடத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுகிறார். இறைவனுடைய அருளும், கொடைகளும் நமக்கு வழங்கப்படுகிறபோது, அதனை பெறுவதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும். பெற்றுக்கொண்ட பிறகு, அதனை தக்கவைப்பதில் ஆர்வம் உள்ளவர்களாக இருக்க வேண்டும். இல்லையென்றால், அதனை நாம் சாதாரணமாக இழந்துவிடுகிற நிலைக்கு தள்ளப்பட்டு விடுவோம்.

இறைவன் நமக்கு கொடுத்திருக்கிற கொடைகளுக்காக நன்றி செலுத்துவோம். இறைவன் நமக்கு வழங்கியிருக்கிற வரங்களை நல்ல முறையில் நாம் பயன்படுத்துவோம். அடுத்தவர் பயன் பெற, அர்ப்பண உள்ளத்தோடு உழைப்போம். கொடைகளை இழந்தபிறகு நாம் வருந்துவதால் நமக்கு பயன் ஒன்றுமில்லை. அதற்கான தயாரிப்போடு நாம் வாழ முற்படுவோம்.

~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

%d bloggers like this: