உண்மையான உறவு

உண்மையான உறவு என்பது இரத்தம் தொடர்பான உறவல்ல. அது உணர்வுப்பூர்வமான உறவுமல்ல. அது இறையரசு தொடர்பான உறவு. இறையரசுடனான உறவில் இருக்கிறவர்கள் கடவுளோடு நெருங்கிய தொடர்புடையவர்கள். கடவுளின் விருப்பத்தை நிறைவேற்றுகிறவர்கள். கடவுளுக்காக எதையும் இழப்பதற்கு தயாராக இருக்கிறவர்கள். கடவுளுக்காக, தங்கள் வாழ்வில் எதற்கும் தயாராக இருக்கிறவர்கள். அப்படி வாழ்கிறவர்கள் தான் இயேசுவின் சகோதர, சகோதரிகள். கடவுளின் பிள்ளைகள்.

இந்த உலகில் இரத்த சம்பந்தப்பட்ட உறவுகளின் நிலை நமக்குத்தெரியாதது அல்ல. ஒன்றாகப்பிறந்தவர்கள், ஒரே வீட்டில் வாழ்ந்தவர்கள், உறவாடி மகிழ்ந்தவர்கள், தங்களுக்கு திருமணம் ஆனவுடன், தங்களுக்கென்று குழந்தைகள் பிறந்து குடும்பம் சகிதமாக மாறியவுடன், தங்களோடு உடன்பிறந்தவர்கள் எதிரிகளாக மாறிவிடுகின்றனர். ஒரே குடும்பத்தில் பிறந்தவர்கள், ஒருவர் மற்றவரைத்தாக்கி இறப்பது அன்றாட செய்தித்தாள்களில் நாம் காண முடிகிறது. அதேபோல, உணர்வுப்பூர்வமான உறவும் நிலையானது அல்ல. கொண்ட கொள்கையில் உறுதியாக இருக்கிறவர்கள் தான் உண்மையான உறவைக்கொண்டிருக்க முடியும். அதற்கு இயேசு சிறந்த எடுத்துக்காட்டு. இறையரசு என்னும் சமூகத்தைக் கட்டியெழுப்ப அவர் கொண்டிருந்த ஆவல் தான், அவரை மற்றவரோடு நெருங்கிப்பழகவும், உண்மையான அன்பு கொண்டிருக்கவும் தூண்டியது.

நமக்கென்று கிறிஸ்தவ சமூகம் வைத்திருக்கிற மதிப்பீடுகள், விழுமியங்களின் மீது நாம் முழுமையான நம்பிக்கை உள்ளவர்களாக இருக்க வேண்டும். அந்த விழுமியங்களுக்கு எதிரான நிகழ்வுகள் நடக்கிறபோது, அதைத்துணிந்து கேட்கிறவர்களாக இருக்க வேண்டும். அத்தகைய அருள் வேண்டி, ஆண்வரிடத்தில் மன்றாடுவோம்.

~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

%d bloggers like this: