உண்மை உரைக்கும் தூய ஆவி

இன்றைய நற்செய்தி (லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 8-12), தூய ஆவிக்கு எதிரான, மன்னிக்க முடியாத குற்றத்தை நமக்கு உறுதிபடுத்துகிறது. மத்தேயு 12: 31 – 32 மற்றும் மாற்கு 3: 28 – 29 ல், இயேசுவின் குணப்படுத்துகின்ற வல்லமையை, தீய ஆவிகளின் சக்திக்கு ஒப்பிடுகிறபோது, இயேசு இதைச் சொல்கிறார். இந்த திருச்சட்ட அறிஞர்கள், கடவுளுடைய அருளையும், ஆசீரையும் தீய ஆவிகளுக்கு ஒப்பிடுகிறார்கள். யூதர்களைப் பொறுத்தவரையில், தூய ஆவியானவரைப்பற்றிய புரிதல் நமக்கு தெரிந்திருக்க வேண்டும். இயேசு இங்கே தூய ஆவியானவரைப் பற்றிப் பேசுகிறபோது, அவர் சொல்கிற அர்த்தமும் நமக்கு விளங்க வேண்டும். அப்போதுதான், நம்மால், சரியான விளக்கத்தைப் பெற முடியும்.

தூய ஆவியின் செயல்களாக இரண்டு குறிப்பிடப்படுகின்றது. 1. கடவுள் மனிதர்களுக்கு, தூய ஆவியானவர் வழியாக, உண்மையை உரைத்தார். உண்மையை உரைப்பது தூய ஆவியானவரின் பணி. 2. தூய ஆவியனவரின் தூண்டுதலினால் தான், மனித உள்ளம், கடவுள் அறிவிக்கும் உண்மையை, புரிந்து கொள்ள முடிந்தது. அவருடைய தூண்டுதல் இல்லாமல், கடவுள் வெளிப்படுத்தும் உண்மையை புரிந்து கொள்ள முடியாது. இதுதான், தூய ஆவியானவர் பற்றிய, யூதர்களின் புரிதல். பொதுவாக, ஏதாவது ஒன்றின் மீது நமக்கு அதிக ஈர்ப்பு இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். உதாரணமாக, இசையின் மீது நமக்கு அதிக ஈர்ப்பு இருக்கிறது. அடிக்கடி, இசையைக் கேட்டு, இசை மீதான ஆர்வத்திற்கு நாம் தீனி போடுகிறோம். ஆனால், நமது பணியின் காரணமாக, அதைக்கேட்பதை தள்ளிப்போட்டுக்கொண்டே இருக்கிறோம், என்று வைத்துக்கொள்வோம். ஒரு கட்டத்தில், இசையின் மீதான நமது ஆர்வமும், அதைக்கேட்க வேண்டும் என்கிற ஈடுபாடும், சுத்தமாக இல்லாமல் போய்விடும். அதே போல, உண்மையை அறிந்து கொள்ள உதவுகிற தூய ஆவியின் தூண்டுதலை, நாம் பொருட்படுத்தாமல் விட்டுவிட்டால், ஒரு கட்டத்தில், தூய ஆவியானவர் எப்படி வெளிப்படுத்தினாலும், அதைப் புரிந்து கொள்ளக்கூடிய சக்தியை, நாம் இழந்துவிடுவோம். திருச்சட்ட அறிஞர்களுக்கு அதுதான் நடந்து கொண்டிருந்தது. அவர்கள், தூய ஆவியின் தூண்டுதலை அறிந்து கொள்ளக்கூடிய, உணரக்கூடிய அந்த கொடையை, தொடர்ந்து தூய ஆவியானவரைப் புறக்கணித்ததன் மூலமாக இழந்து விட்டார்கள். இனி அவர்கள், திருந்துவதற்கான வாய்ப்பும், அவரை அறிந்து கொள்வதற்கான சூழலும், நிச்சயம் வராது. இனி அவர்களிடமிருந்து, நல்லது வருவதற்கும் வாய்ப்பில்லை. உண்மை வருவதற்கும் வாய்ப்பில்லை. எனவே தான், இயேசு தூய ஆவிக்கெதிரான பாவத்திற்கு மன்னிப்பே கிடையாது என்கிறார். அதாவது, இனி திருச்சட்ட அறிஞர்கள், உண்மையை அறிந்து கொள்வதற்கு வாய்ப்பே கிடையாது என்பதால் தான்.

கடவுள் நமக்கு பல வகைகளில், தன்னை வெளிப்படுத்திக்கொண்டே இருக்கிறார். நாம் செய்கிற தவறுகளை, நல்ல காரியங்களை, அவர் தூய ஆவியானவரின் தூண்டுதலால், நமக்கு உணர்த்திக் கொண்டே இருக்கிறார். நாம் கடவுளோடு நெருங்கிய தொடர்பில் இருக்கிறபோது, நிச்சயம் அதை, உணர்ந்து கொள்ள முடியும். எப்போது, நாம் கடவுளைவிட்டு, வெகுதொலைவில் செல்கிறோமோ, அப்போது, நம்மால், அதை உணரவே முடியாது.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

%d bloggers like this: