உண்மை வெல்லும்

இயேசுவை ஒழித்துக்கட்டுவதற்கு அதிகாரவர்க்கம் எத்தனையோ முயற்சிகளை எடுத்தது. இயேசுவை சதிவலையில் சிக்கவைப்பதற்கு சதித்திட்டங்களைத் தீட்டினர். சட்டத்திற்கு எதிராகப்பேசுகிறான் என்ற பொய்க்குற்றச்சாட்டுக்களைக் கூறினர். கடவுளை நிந்திக்கிறான் என்ற பழிபோடப்பட்டது. இவ்வளவு முயற்சிகள் செய்து, இயேசு என்ற ஒரு மனிதரை ஒழிப்பதற்கு அவர்கள் எடுத்த முயற்சிகளுக்கு ஓரளவு பலனும் கிடைத்தது. அவர்கள் நினைத்தது போலவே அவரை சிலுவையில் அறைந்து கொன்றாயிற்று.

அவ்வளவுதான் ஒழிந்தான் என்று அவர்களால் நிம்மதியாகவும் இருக்கமுடியவில்லை. உயிரோடு மற்றவர்களை எழுப்பியவன், உயிரோடு வந்துவிடுவானோ? என்ற படபடப்பு, பதைபதைப்பு அவர்கள் மத்தியில் மீண்டும் எழுந்தது. அவர்கள் பயப்பட்டது போலவே நடந்தும் விட்டது. இருந்தாலும், இவ்வளவு செய்தவர்கள் இதை மட்டும் அப்படியே விட்டுவிடுவார்களா என்ன? மீண்டும் ஒரு பொய்யைக்கூறி, இயேசுவின் வாழ்வை கல்லறையோடு மூடிவிட முனைகிறார்கள். ஆனால், எவ்வளவுதான் பொய்களை அவிழ்த்துவிட்டு, உண்மையை மூடிமறைத்தாலும், இறுதிவெற்றி உண்மைக்குத்தான் என்பதை இன்றைய வாசகம் நமக்கு தெளிவாக்குகிறது. தருமத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், தருமம் மீண்டும் வெல்லும் என்பது இயேசுவின் வாழ்வில் உண்மையாகிறது. உண்மை ஒருநாள் வென்றே தீரும் என்பதற்கு இயேசுவின் உயிர்ப்பு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு. உண்மையை பலகாலம் மூடிவைக்க முடியாது.

வாழ்வில் நேர்மையோடு, நீதியோடு, உண்மையோடு வாழ்கிற மக்களுக்கு இயேசுவின் உயிர்ப்பு மிகப்பெரிய ஆறுதல் செய்தி. இந்த உலகத்தில் ஏன் அநியாயம் செய்கிறவர்கள் மட்டும் நன்றாக வாழ்கிறார்கள், உண்மைக்காக உழைக்கிறவர்கள் அநியாயமாகச் சாகிறார்கள்? என்ற கேள்வி வரலாறு தொடங்கியதில் இருந்தே மனித சமூகத்தை அலைக்கழித்துக்கொண்டிருக்கிறது. இயேசுவின் இறப்பு தோல்வி போலத்தோன்றினாலும், அந்த இறப்புதான் பலபேருக்கு வாழ்வைப்பெற்றுத்தந்தது. அந்த இறப்புதான் மனிதகுலத்திற்கு மீட்பைப்பெற்றுத்தந்து. உண்மைக்காக உறுதியாகப்போராடுகிறவர்களுக்கு மகிழ்வையும் தரப்போகிறது. உண்மைக்காக உறுதியாகப் போராடுவோம். அது நிச்சயம் நமக்கு வெற்றியைத்தேடித்தரும்.

~ அருட்பணி. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

%d bloggers like this: