உதவிக்கரம் நீட்டுவோம்

இயேசு காதுகேளாதவருக்கு குணம் கொடுத்துவிட்டு கடவுளின் வார்த்தையைப் தெக்கப்போலி பகுதியில் போதித்துக்கொண்டிருக்கிறார். மக்கள் மூன்று நாட்களாக இயேசுவோடு தங்கியிருக்கிறார்கள். யார் இந்த மக்கள்? விவிலிய அறிஞர் ஒருவர் அழகான விளக்கம் ஒன்று தருகிறார். மாற்கு நற்செய்தி 5வது அதிகாரத்தில், இயேசு கெரசேனர் பகுதியில் பேய் பிடித்த மனிதர் ஒருவரை நலமாக்குகிறார். அந்த மனிதன் இயேசுவோடு கூட இருக்க வேண்டும் என்று விரும்பினான். இயேசுவோ அவரைப்பார்த்து, “உமது வீட்டிற்குப்போய் ஆண்டவர் உமக்குச்செய்ததையெல்லாம் உம் உறவினருக்கு அறிவியும்” என்றார். அவர் சென்று, இயேசு தமக்குச் செய்ததையெல்லாம் தெக்கப்போலி நாட்டில் அறிவித்து வந்தார், என்று பார்;க்கிறோம். இயேசுவோடு இப்போது இருக்கும் மக்கள், பேய்பிடித்திருந்த மனிதர் வழியாக இயேசுவைப்பற்றி அறிந்த மக்கள். அந்த மனிதர் சொன்னதை இப்போது நேரில் அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள்.

இயேசு சீடர்களிடம் ஒரு ஆலோசனைக்கேட்கிறார். இது சீடர்களுக்கு ஒருவிதமான பயிற்சி. என்னதான் சீடர்கள் சொல்கிறார்கள் பார்ப்போம் என்று சொல்லி, அவர்களிடம் அப்போது இருக்கிற சூழ்நிலையை விவரிக்கிறார். என்ன செய்யலாம்? என சீடர்களைக்கேட்கிறார். சீடர்களின் பதில் எதிர்மறையாக இருக்கிறது. ஏதோ இயேசு அவர்களை உணவுகொடுக்கச்சொன்னதுபோல், அவர்கள் பதில் சொல்கிறார்கள். சீடர்கள் இன்னும் பக்குவமடையவில்லை, தேர்ச்சி பெறவில்லை என்பதைத்தான் அவர்களின் பதில் காட்டுவதாக இயேசு உணர்ந்திருக்க வேண்டும். உதவி செய்ய நல்ல மனம் இருந்தால் போதும், கடவுள் கருணைகாட்டுவார், வழிகாட்டுவார் என்பதை இந்தப்புதுமை நமக்குத்தெளிவாக உணர்த்துகிறது. நம்முடைய இலக்கு தெளிவானதாக இருந்தால், நான்கு பேருக்கு நன்மைதரக்கூடியதாக இருந்தால், எப்படி செய்யப்போகிறோம்? என்ற கவலை கொள்ளத்தேவையில்லை. கடவுள் தருவார் என்ற நம்பிக்கை மட்டும்போதும் என்கிற பாடத்தை இயேசு நமக்கு கற்றுத்தருகிறார்.

மற்றவர்களுக்கு உதவி செய்ய நல்ல மனம் தாரும் என்று இயேசுவிடம் மன்றாடுவோம். உதவி செய்ய மறப்பதும், மறுப்பதும் மனித குலத்திற்கு எதிரான பாவமாகக்கருதுவோம். தேவையில் இருப்பவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவோம்.

~ அருட்பணி. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

%d bloggers like this: