உன்னை அதிசயங்களைக் காணப்பண்ணுவேன். மீகா 7 : 15

தேசத்தில் உள்ள எல்லா மக்களே!கடவுளின் நியாயத்தை நடப்பிக்கிறவர்களே, ஆண்டவரைத் தேடுங்கள்.அவரின் நீதியை தேடுங்கள். மனத்தாழ்மையை தேடுங்கள். அப்பொழுது ஆண்டவர் நம்மை எல்லாப்பொல்லாப்புக்கும் விலக்கி அதிசயங்களைக் காணப்பண்ணுவார். அவர் நம்நடுவில் இருக்கிறார். வல்லமையுள்ளவர். அவரே இரட்சிப்பார். அவர் நமது பேரில் சந்தோஷப்பட்டு மகிழ்ந்து தம்முடைய அன்பின் நிமித்தம் அமர்ந்திருப்பார்.

இஸ்ரயேல் ஜனங்கள் எகிப்தில் இருந்து புறப்பட்ட காலத்தில் அநேக அற்புதங்களையும், அதிசயங்களையும் செய்தார். நாமும் ஆண்டவரின் ஒவ்வொரு வார்த்தைக்கும் பயந்து, கீழ்படிந்து நடக்கும்பொழுது அவரின் கிருபை நம்மை சூழ்ந்துக்கொள்ளும்.நாம் அவருக்காக பொறுமையுடன்
காத்திருந்தால் நமது கூப்பிடுதலை கேட்பார்.

ஆண்டவர் நோவாவிடம் நீ ஒரு பேழையை உண்டு பண்ணு என்று சொன்ன நேரத்தில் எந்த ஒரு மழைக்கான அறிகுறியும் இல்லவே இல்லை. ஆண்டவரின் வார்த்தைக்கு நோவா கீழ்படிந்து ஒரு பேழையை உண்டு பண்ணுகிறார். அந்த ஊரில் அப்பொழுது வாழ்ந்த மக்கள் அவரை கிண்டல் செய்திருப்பார்கள். நோவாவை பார்த்து உனக்கு பைத்தியமா? என்று கூட சொல்லியிருக்கலாம். ஆனால் அவர் எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் ஆண்டவரின் வார்த்தைக்கு அப்படியே கீழ்படிந்து ஆண்டவரின் சித்தப்படி ஒரு பேழையை உண்டுபண்ணி, அதில் சகலவிதமான மிருகங்கள், பறவைகள் மற்றும் நோவாவின் குடும்பம் மாத்திரம் அதில் பிரவேசிக்கச்செய்து நோவா ஆண்டவரின் ஒவ்வொரு வார்த்தைக்கும், கீழ்படிந்து நடந்ததால் அக்காலத்தில் நோவா குடும்பம் மாத்திரம் தப்புவிக்க கடவுளும் உதவி செய்தார்.

கடவுள் 40 நாள் இரவும், பகலும் மழையை வருவித்து பெரிய பெரிய மலைகளும், குன்றுகளும், முளுகும்படி செய்து எல்லா மக்களையும் அழித்து விட்டு நோவா கீழ்படிந்து நடந்ததால் அவரையும் அவர் குடும்பத்தையும் மாத்திரம் காப்பாற்றியதாக வாசிக்கிறோம். தொடக்கநூல் 6,7,8,ஆகிய அதிகாரத்தில் உள்ளது. பிறகு ஆண்டவர் அவர்களை ஆசீர்வதித்து நீங்கள் பலுகி பெருகி பூமியை நிரப்புங்கள் பூமியில் உள்ள எல்லாவற்றையும் உங்களுக்கு கொடுத்தேன் என்று ஆண்டவர் திருவுளம் பற்றுகிறார். இதுமாதிரி ஆபிரகாம் வாழ்க்கையில் நடந்த அதிசயத்தை நாளை பார்க்கலாம்.

நாமும் நோவாபோல் ஆண்டவரின் ஒவ்வொரு வார்த்தைக்கும் கீழ்படிந்து நடந்து நம்முடைய ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்வோம்

ஜெபம்

கருணை நிறைந்த ஆண்டவரே உம்மை போற்றுகிறோம். நீர் உமக்கு கீழ்படிந்து நடக்கும் மக்களுக்கு உண்டு பண்ணி வைத்திருக்கும் ஆசீர்வாதங்கள் அநேகம், அநேகம். நோவாவிற்கு உமது கண்களில் கிருபை கிடைத்ததுபோல் எங்களுக்கும் உமது கருணையையும் கிருபையையும் அளிக்க வேண்டுமாய் கெஞ்சி மன்றாடுகிறோம். நீரே எங்களை பொறுப்பெடுத்துக்கொள்ளும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வேண்டுகிறோம் எங்கள் பிதாவே!ஆமென்!!அல்லேலூயா!!!

You may also like...

Leave a Reply

%d bloggers like this: