உயர்ந்த அன்பு எது??

“இருக்கின்றவராகவே இருக்கின்றவர் நானே” என்று அன்று மோசேயிடம் வாக்களித்து நீ இஸ்ரயேல் மக்களிடம் சென்று ” இருக்கின்றவர் நானே” என்பவர் என்னை உங்களிடம் அனுப்பினார் என்று சொல்லச் சொன்னார். விடுதலை பயணம் 3 : 14. அன்று அவ்வாறு வாக்களித்த
இறைவன் இன்றும் ” இருக்கிறவராகவே இருந்து” எனக்காக,உனக்காக ஏன் நம்மெல்லோருக்காகவும் இந்த பூமியில் ஒரு மனிதனாக பிறந்து அன்பை வெளிப்படுத்தினார். ஆபிரகாமின் கடவுள்,ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள்,இந்த உலகம் அனைத்திற்கும் கடவுள் அவரே, இதுவே என்றென்றும் என் பெயர் என்று சொல்லி தலைமுறை, தலை முறையாக,என் நினைவுச் சின்னமும் இதுவே! வி.ப 3:15 என்று சொல்வதை வாசிக்கிறோம்.

கடவுள் அனைத்தையும் கடந்தவர். மனித அறிவுக்கு எட்டாதவர். அவரின் இன்னொரு பெயர் யாவே என்பதாகும். எதையும் காண்பவர், யாவற்றையும் கடந்தவர், இவ்வளவு மகத்துவமும், வல்லமையும் , மாட்சியும், ஜெயமும் உள்ள கடவுள் ஏன் மிகவும் தாழ்மை நிலையில் ஒரு மாட்டுக்கொட்டகையில் வந்து பிறக்கவேண்டும்?அவர் நினைத்திருந்தால் ஒரு ராஜாவாக, அல்லது வானத்தில் இருந்து நேரிடையாக இறங்கி நான்தான் கடவுள் என்னை பணிந்துக்கொள்ளுங்கள், என்று சொல்லி வந்திருக்கலாமே! ஏன் அவ்வாறு வந்து நம்மை சந்திக்கவில்லை?அவர் நம்மேல் வைத்த அன்பு ஒன்றே காரணமாகும்.

அவருடைய சாயலில் நம்மை படைத்தவர் நாமும் அவரைப்போல் இருக்கவேண்டும் என்று விரும்புகிறார். அன்று ஆதாம், ஏவாள் செய்த பாவத்தினால், ஆண்டவர் உண்ணக்கூடாது என்று சொன்ன கனியை உண்டதனால் வந்த பாவத்தை போக்க கடவுள் மனித அவதாரம் எடுத்து தம்முடைய உடலை அப்பமாக புசிக்கக் கொடுக்க நற்கருணையின் ஆண்டவர் நமது பாவத்தை போக்க,நம்மேல் வைத்த அன்பின் மிகுதியால் இப்பூமிக்கு வந்து தம்மையே ஜீவபலியாக கொடுத்திருக்கிறார். ஆபிரகாம் எங்களுக்குத் தந்தை என உள்ளத்தில் சொல்லத் தொடங்காதீர்கள். இக்கற்களிலிருந்தும் ஆபிரகாமுக்குப் பிள்ளைகளைத் தோன்றச்செய்யக் கடவுள் வல்லவர் என உங்களுக்கு சொல்கிறேன் என்று லூக்கா 3:8 ல் வாசிக்கிறோம்.

கடவுள் நினைத்தால் கல்லுகளில் இருந்தும் மனிதர்களை உருவாக்க முடியும் என்பதைக் காண்கிறோம். இவ்வளவு மகிமை நிறைந்த ஆண்டவர் கெத்சமனே தோட்டத்தில் தன் தந்தையிடம் முடிந்தால் இத்துன்பக் கிண்ணம் என்னைவிட்டு அகலட்டும்.ஆனாலும் என் விருப்பப்படி அல்ல.உம் விருப்பப்படியே நிகழட்டும், என்று சொல்லி இறைவனிடம் வேண்டுகிறார்.மத்தேயு 26 : 39.

நமது நெருங்கிய நண்பர்கள் ஒருவேளை இவ்வாறு சொல்லலாம் . நான் உனக்காக என் உயிரைத் தருவேன். ஆனால் அவர்கள் நம்மை ஆறுதல் படுத்த சொல்லும் வார்த்தையாக மாத்திரம் இருக்குமே தவிர உண்மையாகாது. அப்படியில்லை என்றால் என்ன விதமான மரணம் நிகழும் என்று தெரியாமல் சொல்லலாம். ஆனால் இயேசுவைபோல் தான் முள்முடி சூடப்படுவதும்,சேவர்களால் அடிக்கப்படுவதும், சிலுவையை சுமப்பதும்,பிறகு அந்த சிலுவையிலே படுக்க வைத்து ஆணியால் அடிக்கப்படுவதும் இதுவெல்லாம் முன்கூட்டியே தெரிந்திருந்தும் அதை மனப்பூர்வமாய் ஏற்றுக்கொண்டு செய்து முடித்தார். தன் வேதனை தாங்க முடியாமல் என் இறைவா, என் இறைவா, ஏன் என்னை கைவிட்டீர்.என்று கதறினார்.

அன்பானவர்களே! நீங்கள் யோசித்துப் பாருங்கள்.யாராவது நமது நண்பர்களோ, கூடப் பிறந்தவர்களோ,அல்லது பெற்றோர்களோ யாராயிருந்தாலும் இவ்வளவு துன்பத்தின் மூலம் தான் நமக்காக உயிரைக்கொடுக்க முடியும் என்று தெரிந்தால் யாராவது முன்வருவார்களா? எனக்கு தெரியவில்லை. ஆனால் எல்லாம் தெரிந்தும் தமது உயிரைக் கொடுத்த ஒரே கடவுள் இயேசுவே!அதனால் அவரை நாமும் ஏற்றுக்கொண்டு அவர் வழியில் அன்பின் வழியில்,உண்மை யின் வழியில், இரக்கத்தின் வழியில்,நீதியின் வழியில்,சென்று அவர் ஒருவருக்கே மகிமையை செலுத்துவோம்.அதுவே உயர்ந்த அன்பு.

அன்பின் ஊற்றாம் இறைவா!

ஊற்றுத் தண்ணீரைப் போல் உமது அன்பு எப்பொழுதும் ஊறிக்கொண்டே இருப்பதற்காக உம்மை போற்றுகிறோம் ,துதிக்கிறோம். உம்மைப்போல் அன்பு காட்ட யாரால் முடியும்?அந்த அன்புக்கு ஈடு இணை இந்த பூமியில் ஒன்றுமே இல்லை அப்பா. நீர் படப்போகும் பாடுகளை அறிந்தும் எங்களுக்காக உமது உயிரைக் கொடுத்தீரே! உமக்கு நன்றி செலுத்துகிறோம். அந்த காரியத்தை நாங்கள் ஒருபோதும் மறந்து விடாதபடி ஒவ்வொருநாளும் உம்மை நினைத்து, உம்மை போற்றி துதித்து,ஆராதிக்க உதவி செய்யும்.எங்கள் துன்ப வேளையிலும் நாங்கள் மனம் சோர்ந்து போகாதபடிக்கு, முறுமுறுக்காதப்படிக்கு காத்துக்கொள்ளும்.” இருக்கிறேன் என்ற ஆண்டவர் நீர் இருக்கிறவராகவே இருக்கிறபடியால்” எல்லோருக்கும் எல்லாம் இருக்கிறபடியே கிடைக்கிற பாக்கியத்தை தந்தருளும். துதி, கனம், மகிமை யாவும்உம் ஒருவருக்கே உண்டாகட்டும். இயேசுகிறிஸ்துவின் இணையற்ற நாமத்தில் வேண்டிக்கொள்கிறோம் எங்கள் ஜீவனுள்ள தந்தையே!

ஆமென்! அல்லேலூயா!!

You may also like...

Leave a Reply

%d bloggers like this: