உலகின் விதானத்தின்மீது வீற்றிருப்பவர் நமது ஆண்டவரே! எசாயா 40 : 22

இந்த பூமியில் வாழும் நாம் ஆண்டவரின் பார்வைக்கு வெட்டுக்கிளி போல் இருக்கிறோம். கடவுள் வானங்களை மெல்லிய திரைகளாக பரப்பி அவைகளைக் குடியிருக்கும் கூடாராமாக விரிக்கிறார். ஆள்வோரை வீழ்த்துபவர் அவரே! மண்ணுலகின் தலைவர்களை ஒன்றுமில்லாது ஆக்குபவர் அவரே. அவர்கள் திரும்ப நாட்டப்படுவதுமில்லை. விதைக்கப்படுவதுமில்லை. அவர்களுடைய அடிமரம் திரும்ப பூமியிலே வேர்விடுவதுமில்லை. அவர்கள்மேல் ஆண்டவர் ஊதவே அவர்கள் பட்டுப்போவார்கள். பெருங்காற்று அவர்களை ஒரு துரும்பைப்போல் அடித்துக்கொண்டு போகும்.

இவ்வளவு வல்லமையும்,மகத்துவமும் நிறைந்த ஆண்டவர் நம்மோடு இருக்கும்பொழுது நாம் மனம் கலங்க வேண்டிய அவசியம் தான் வேண்டுமோ! ஆண்டவரின் ஆவிக்கு வழிகாட்டியவர் யார்? அவருக்கு அறிவுரையாளனாய் இருந்து கற்றுத்தந்தவர் யார்? யாரிடம் அவர் அறிவுரை கேட்டார்? அவருக்கு பயிற்சி அளித்து, நீதிநெறியை உணரத்தியவர் யார்? அவருக்கு அறிவு புகட்டி விவேக நெறியைக் காட்டியவர் யார்? அவர் பூமியின் உருண்டையின்மேல் வீற்றிருக்கிறார். அங்கிருந்து நம்மை கண்ணோக்கி பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்.

சகல மக்களும் அவருக்குமுன் ஒன்றுமில்லை. அவர்கள் சூனியமாகவும், மாயையாகவும் எண்ணப்படுகிறார்கள். அவரை யாரோடும் ஒப்பிடாதீர்கள்.யாரோடு ஒப்பிட்டு எந்த சாயலை அவருக்கு நிகராக செய்வீர்கள்? நம்முடைய கடவுளால் மாத்திரமே யாவையும் செய்ய முடியும் என்று உறுதியாய் நம்பி அவரையே தஞ்சம் என்று போனால் அவர் நம்மை உயர்த்தி உயர்ந்த அடைக்கலத்தில் வைப்பார். பயப்படதே,உன்னுடன் இருக்கிறேன் என்று சொன்னவர் உங்கள் அருகில் இருக்கிறார். நம்மை பலப்படுத்தி, நமக்கு சகாயம் அளித்து அவருடைய நீதியின் வலக்கரத்தினால் நம்மை தாங்குவார்.

இந்த நாளிலும் அநேக தேவைகளின் மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கும் நமது ஒவ்வொரு காரியத்தையும் அவரே பொறுப்பெடுத்து நமக்கு முன் நின்று எல்லா ஆசீர்வாதத்துடன் நம்மை காத்து ஆசீர்வதித்து கழுகு இறக்கைகளை விரித்து பறப்பதுபோல் நம்மையும் பறக்கும்படி எழுப்புவார். நாம் பறந்தாலும் கீழே விழமாட்டோம்.நாம் நடந்தாலும் சோர்ந்து போகமாட்டோம். ஆண்டவரே நம்முடன் இருந்து பறக்கவும், நடக்கவும் கற்றுத்தருவார்.

ஜெபம்

அன்பின் தேவனே! இதோ பூமியின் ஒரு ஓரத்தில் வாழ்கின்ற எங்களையும் நீர் காண்கிற தேவனாய் இருக்கிறீர். நாங்கள் இருந்த இடத்திலிருந்து எங்களை அழைத்து எங்களை தெரிந்துக்கொண்டு இம்மட்டும் கிருபையாய் வழிநடத்திய தெய்வம் நீரே, உம்மையே போற்றுகிறோம், புகழ்கிறோம், ஆராதிக்கிறோம், உமக்கு பிரியமாய் வாழ்ந்து உமது நாமத்துக்கே மகிமை சேர்க்க உதவி செய்யும். உமது வல்லமையையும், மகத்துவத்தையும் அறிந்துக்கொள்ள செய்யும். பொறுப்பெடுத்துக் கொள்ளும், ஆசீர்வதியும், காத்துக்கொள்ளும். இயேசுகிறிஸ்துவின் வல்லமையான நாமத்தில் ஜெபத்தை ஏறேடுக்கிறோம் எங்கள் நல்ல தகப்பனே! ஆமென்!! அல்லேலூயா!!!

You may also like...

Leave a Reply

%d bloggers like this: