உலகை வெல்லுவது நம்முடைய நம்பிக்கையே!!

நம்பிக்கையானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும்,காணப்படாத வைகளின் நிச்சயமுமாயிருக்கிறது. எபிரேயர் 11 : 1. நம் கண் முன்னே தோன்றும் காரியத்தை யார் வேண்டுமானாலும் நம்பலாம். நம் கண்ணுக்கு புலப்படாத, நாம் அறியாத ஒரு காரியத்தை நம்புவதையே மேன்மையாக ஆண்டவர் நினைக்கிறார். ஏனெனில் கடவுளிடமிருந்து பிறக்கும் அனைத்தும் உலகை வெல்லும். இந்த உலகை வெல்லுவது நம் நம்பிக்கையே.1 யோவான் 5 : 4.

நம்முடைய நம்பிக்கை உறுதிப்படும் பொழுது அதைக் கனப்படுத்தவே ஆண்டவர் விரும்பி நமக்குள் செயலாற்றி அந்த நம்பிக்கையை நிறைவேற்றித்தருவார். கடவுள் நம்மிடம் கொண்டுள்ள அன்பை நாம் அறிந்துள்ளோம்.அதை நம்புகிறோம்.அப்படியிருக்க பல நேரங்களில் மனம் சோர்ந்து போய் வாழ்க்கையை வெறுமையாய் நினைக்கிறோம். நாம் இயேசுவை இறைமகன் என்று நம்பினால் நம்மைத் தவிர இந்த உலகத்தை யாரால் வெல்ல முடியும்?ஆண்டவரை உறுதியாய் பற்றிக்கொண்ட மனதை உடையவர்கள் அவரையே நம்பியிருக்கிறபடியால் அவர்கள் ஒவ்வொருவரையும் கடவுள் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வார்.

கடவுள் நமக்கு நம்பிக்கையில் பலப்படும் பொருட்டு ஞானத்தை உடைய ஆவியையும், ஆலோசனை உடைய ஆவியையும், பெலனை கொடுக்கும் ஆவியையும், அறிவை உணர்த்தும் ஆவியையும், அவருக்கு பயப்படும் பயத்தை அருளும் ஆவியையும், கொடுத்திருக்கிறார். ஒரு குழந்தைக்கு இரண்டு தாய் போட்டி போட்ட பொழுது அந்தக் குழந்தையின் உண்மையான தாயை கண்டுபிடிக்க சாலோமோனுக்கு ஞானத்தையும், நம்பிக்கையும் கொடுத்த அதே கடவுள் நமக்கும் கொடுக்க வல்லவராக இருக்கிறார். நம்முடைய வேலை எல்லாம் அவரின் வார்த்தைகளை அப்படியே நம்புவது மட்டும்தான். அந்த நம்பிக்கையால் உலகத்தை ஜெயித்து கடவுளுக்கே மகிமை
சேர்ப்போம்.

அன்பின் இறைவா!

உம்மை போற்றுகிறோம்,துதிக்கிறோம், நீரே எங்கள் நம்பிக்கையாய் இருந்து எங்கள் உள்ளத்தில் செயலாற்றி அந்த நம்பிக்கையின் நிச்சயத்தில் வழிநடத்தும்.உம்மை அண்டிக்கொள்கிற யாவரும் பாக்கியவான்களாக,பாக்கியவதிகளாக இருக்க உதவி செய்யும். உம்மேல் நாங்கள் வைத்த நம்பிக்கை எங்களை ஒருபோதும் வெட்கப்படுத்தாதபடிக்கு காக்கிற தேவனாய் இருக்கிறீர். அதற்காக உமக்கு கோடி ஸ்தோத்திரம் செலுத்துகிறோம். துதி, கனம், மகிமை யாவும் உம் ஒருவருக்கே உண்டாகட்டும். இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் வேண்டுகிறோம் எங்கள் தந்தையே! ஆமென்! அல்லேலூயா!

You may also like...

Leave a Reply

%d bloggers like this: