உள்ளதே போதும் என்ற மனநிறைவோடிருப்பதே நலம்

பண ஆசை உள்ளவருக்கு எவ்வளவு பணம் இருந்தாலும் ஆவல் தீராது. செல்வத்தின்மேல் மிகுந்த ஆசை வைப்பவர் அதனால் பயனடையாமற்போகிறார்.  சொத்து பெருகினால் அதைச் சுரண்டித் தின்போரின் எண்ணிக்கையும் பெருகும். செல்வர்களுக்கு தங்கள் சொத்தைக் கண்ணால் பார்ப்பதைத் தவிர வேறு என்ன பயன் உண்டு ? ஆனால், வேலை செய்பவரிடம் போதுமான சாப்பாடு இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம். ஆனால் அவர்களுக்கு நல்ல தூக்கமாவது இருக்கும். ஆனால் செல்வர்களின் பணமோ அவர்களை தூங்கவே விடாது. ஒருவர் சேர்க்கும் அதிகப்படியான செல்வம் அவருக்கு துன்பமே விளைவிக்கும். அந்த செல்வத்தை பாதுகாக்க அவர்கள் எவ்வளவாக கஷ்டப்படுகிறார்கள்.

நாம் யாவரும் தாயின் வயிற்றில் இருந்து வெற்றுடம்போடு வருகிறோம். வருவது போலவே இவ்வுலகை விட்டுப் போகிறோம். நம் உழைப்பால் கிடைக்கும் பொருள் எதையும் நம்மோடு கொண்டு செல்வதில்லையே! வாழ்நாள் முழுதும் இருள், கவலை , பிணி, துன்பம். இவைகள் இல்லாத மனிதர் உண்டா? ஆகையால் கடவுள் நமக்கு கொடுக்கும் வாழ்நாளை மகிழ்ச்சியோடு நமக்குள்ளதே போதும் என்ற மனநிறைவோடு வாழ்வதே சிறந்ததாகும்.

கடவுள் ஒருவருக்கு பெருஞ்செல்வமும், நல்வாழ்வும், கொடுத்து அவற்றை அவர்கள் பயன்படுத்தும் வாய்ப்பையும் அளிப்பாரானால் அவர்கள் நன்றியோடு தமது பயனை அனுபவிக்கலாமே! அது அவகளுக்கு கடவுள் அருளும் நன்கொடை. தம் வாழ்நாள் குறுகியதை நினைத்து கவலைப்படாமல் இருப்பார்கள். ஏனெனில் கடவுள் அவர்கள் உள்ளத்தை மகிழ்ச்சியோடு இருக்கச் செய்வார். ஆனால் சிலபேருக்கு அவர்கள் விரும்புவதெல்லாம் கிடைக்கும். அனால் அவற்றை அனுபவிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைப்பதில்லை. அதை வேறொருவர் அனுபவிக்கிறார். பெருஞ்செல்வமோ குறைந்த செல்வமோ, அவரவருக்கு கடவுள் கொடுப்பதை வைத்து மகிழ்ச்சியோடு வாழ்வதே சிறந்தது. சபை உரையாளர் 5 : 10 to 18.

” எனக்கு எல்லாம் இருந்தால் நான், ” உம்மை எனக்குத் தெரியாது” என்று மறுதலித்து, ” ஆண்டவரைக் கண்டது யார்? ” என்று கேட்க நேரிடும். நான் வறுமையுற்றால், திருடனாகி, என் கடவுளின் திருப்பெயருக்கு இழிவு வருவிக்க நேரிடும். ஆகையால் இறைவா! உம்மிடம் இரண்டு வரம் கேட்கிறோம், மறுக்காதீர். நாங்கள் சாவதற்குள் எங்களுக்கு தந்தருளும். வஞ்சனையும், பொய்யும் எங்களை விட்டு அகலச் செய்யும்; எங்களுக்கு செல்வமும் வேண்டாம், வறுமையும் வேண்டாம், எங்களுக்கு தேவையானவற்றை மட்டும் தந்தருளும். நீதிமொழிகள் 30 :7 ,8 ,9.

இறைப்பற்று பெரும் ஆதாயம் தருவதுதான்; ஆனால், அது மனது நிறைவுள்ளவர்களுக்கே தரும்.     1 திமோத்தேயு 6 : 6.பொருள் ஆசையே எல்லாத் தீமைக்கும் ஆணிவேர். அந்த ஆசையால் சிலர் விசுவாசத்தினின்று பிறழ்ந்து திரிந்து பல வேதனைகளைத் தாங்களாகவே தங்கள்மேல் வருவித்துக் கொள்கிறார்கள். உம்முடைய பிள்ளைகளாகிய நாங்கள் இவற்றுக்கு தப்பி நீதி, இறைப்பற்று, நம்பிக்கை, மன உறுதி, பணிவு, ஆகியவற்றை நாடித்தேடி விசுவாச வாழ்வில் உறுதிக்கொண்டு நிலைவாழ்வை பற்றிக்கொள்ளவே எங்களை அழைத்திருக்கிறீர். ஆகையால் அனைவருக்கும் வாழ்வளிக்கும் உமது முன்னிலையிலும், இயேசுகிறிஸ்துவின் முன்னிலையிலும் எந்த ஒரு குறை சொல்லுக்கும் இடம் தராமல் அப்பழுக்கின்றிக் உம்மையே முன்மாதிரியாக கடைப்பிடிக்க உதவி செய்தருளும்.ஆகையால் அழிந்து போகிற செல்வத்தின் மேல் நாட்டம் கொள்ளாமல் எப்பொழுதும் எங்களுக்கு உள்ளதே போதும் என்கிற மனநிறைவோடு வாழ்ந்திட போதித்தருளும்.

அன்பின் இறைவா!

இதோ, நாங்கள் யாவற்றிலும் குறை உள்ளவர்கள். நாங்கள் மண் என்று நீர் அறிந்து வைத்திருக்கிறீர். பண ஆசையை வெறுத்து நீர் எங்களுக்கு அளிக்கும் வாழ்வில் மனமகிழ்ச்சியோடு வாழ உதவி செய்தருளும். நாங்கள் இந்த உலகிற்கு ஒன்றும் கொண்டு வரவில்லையே! போவும் போதும் ஒன்றும் கொண்டு போகப்போவது இல்லையே. எங்களுக்கு நீர் கொடுக்கும் ஆசீர்வாதத்தால் எப்பொழுதும் உமக்கு முன் சந்தோஷமாக இருக்க நல்ல மனதை தந்தருளும். உமக்கு மாத்திரம் பிரியமாக வாழ உதவி செய்யும். துதி, கனம், மகிமை யாவும் உமக்கே! செலுத்துகிறோம். இயேசுகிறிஸ்துவின் இன்ப நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் தந்தையே!

ஆமென்! அல்லேலூயா!!!

You may also like...

Leave a Reply

%d bloggers like this: