உள்ளம் கலங்க வேண்டாம்

இயேசு தன்னுடைய சீடர்களைப் பக்குவப்படுத்துகிற ஒரு அருமையான செய்தி இன்றைய நற்செய்தியில் நமக்குத் தரப்பட்டுள்ளது. மூன்றாண்டுகள் இயேசுவோடு தங்கியிருந்து, இயேசுவின் புதுமைகளையும், அருங்குறிகளையும் கண்டுமகிழ்ந்து, அப்பங்களை வயிறாற உண்டு, மக்களின் ஏகோபித்த ஆதரவைப்பெற்றவர்களுக்கு இயேசுவின் செய்தி கலக்கத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும். அப்படிப்பட்ட கலக்கமான துன்பமான நேரத்தில், கடவுள் மீது முழுமையான நம்பிக்கையை வைப்பதற்கு இயேசு அழைப்புவிடுக்கிறார். எனவேதான், வேதனையான, வருத்தமான நேரத்தில் உள்ளம் கலங்க வேண்டாம் என்ற ஆறுதல் செய்தியைத்தருகிறார்.

திருப்பாடல்27: 13ல் பார்க்கிறோம்: “வாழ்வோரின் நாட்டினிலே ஆண்டவரின் நலன்களைக் காண்பேன் என்று நான் இன்னும் நம்புகின்றேன்”. எவ்வளவு துயரங்கள், வருத்தங்கள் இருந்தாலும், இன்னும் கடவுள் மீது முழுமையான நம்பிக்கையை வைத்திருக்கிறேன் என்கிற செய்தி இங்கே நமக்குத்தரப்படுகிறது. திருப்பாடல் 141: 8 சொல்கிறது: “ஏனெனில், என் தலைவராகிய ஆண்டவரே! என் கண்கள் உம்மை நோக்கியே இருக்கின்றன: உம்மிடம் அடைக்கலம் புகுகின்றேன்: என் உயிரை அழியவிடாதேயும்”. கடவுள் மீது திருப்பாடல் ஆசிரியர் வைத்திருக்கிற நம்பிக்கை இங்கே வெளிப்படுகிறது. மேற்கண்ட இரண்டு திருப்பாடல் வார்த்தைகளும் கடவுள் மீது எத்தகையச்சூழ்நிலையிலும் நம்பிக்கை இழக்காமல் இருக்கும் செய்தியைத்தருகிறது. வாழ்க்கையில் சிலவேளைகளில், நம்மால் புரிந்துகொள்ள முடியவில்லை என்றாலும், நிரூபிக்கமுடியவில்லை என்றாலும், நாம் நம்பித்தான் ஆகவேண்டும் என்ற கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறோம். நமக்கு நம்புவதற்கு காரணங்கள் இல்லையென்றாலும், கடவுளை நம்புவதுதான் உண்மையான நம்பிக்கை.

நம்பிக்கையின் ஆணிவேராக இருப்பது கடவுளன்பு. கடவுள் என்னை அன்பு செய்கிறார் என்ற எண்ணமே, நமக்கு புதிய உணர்வைத்தர வேண்டும். கலக்கமில்லாமல், பயப்படாமல் வாழ்வதற்கு உந்துசக்தியாக இருக்க வேண்டும். அத்தகையதொரு படிப்பினையை இயேசு தனது சீடர்களுக்கு கற்றுத்தருகிறார். நம்மையும் கற்றுக்கொள்ள அழைக்கிறார்.

~ அருட்பணி. தாமஸ் ரோஜர்

You may also like...

1 Response

  1. venkateswaran says:

    Am venkateswaran pls pray healing my body.more problems in my body pls pray for everyone,Jesus I trust in you please help me.

Leave a Reply

%d bloggers like this: