எங்கும்! எல்லோரிடமும்!

மாற்கு 9 :38 – 40

எவனொருவன் நல்ல மனிதனாக வாழ்கிறானோ அவன் இயேசுவின் பெயராலேயே அனைத்தையும் செய்கிறான். அவன் அவரின் பெயரை வேணுமென்றால் பயன்படுத்தலாம். பயன்படுத்தாமலும் இருக்கலாம். ஆனால் கண்டிப்பாக இயேசுவின் மதிப்பீடுகளை, விழுமியங்களை விட்டுக் கொண்டு ஒருவரால் நல்ல மனிதனாக வாழமுடியாது. இவ்வுலகில் யாரெல்லாம் நல்லதை எண்ணுகிறார்களோ, செய்கிறார்களோ அவர்களோடு நாமும் இணைய வேண்டும். இந்த இணைதலுக்கு சாதி, மதம், இனம் மற்றும் வேறு எந்த வேறுபாடுகளுமே தடையாக இருக்க முடியாது. இதனைத்தான் புகழ்பெற்ற இறையியலாளர் கார்ல் ரானர் ‘அறியப்படாத கிறித்தவர்கள்’ (Anonymous Christians) என்கிறார். கிறித்துவை ஏட்டளவில் அறிந்து அவரை வெளிப்படையாக ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் தனது மனசாட்சியின் படி நல்லது செய்பவர் அவரது அருகில் நெருக்கமாகவே இருக்கிறார். திருமுழுக்குப் பெற்று தினமும் திருப்பலி வந்தவர்களோடு மட்டுமல்லாது எவரெல்லாம் கிறித்தவ மதிப்பீடுகளான அன்பு, நீதி, மன்னிப்பு….. என்று வாழ்கிறார்களோ அவர்கள் அனைவரோடு கிறித்து உயிரோடு இருந்து இயக்கிக் கொண்டுதான் இருக்கிறார்.

நாம் பல நேரங்களில் , குறிப்பாக கத்தோலிக்க கிறித்தவர்கள் மட்டும் தான் அவருக்கு அருகில், அவரைச் சார்ந்திருக்கிறோம் என எண்ணிக்கொண்டு, அவரின் உண்மையான மதிப்பீடுகளின்படியும், சீடத்துவ வாழ்வையும் வாழாமல் இருக்கிறோம். எனவே திருஅவையில் உள்ளவர்கள் அனைவரும் மீட்பு பெறுவர் என்றும் இல்லாதோர் அனைவரும் மீட்படையார் என்று அறுதியிட்டு கூறமுடியாது. இதைத்தான் வத்திக்கான் சங்க ஏடுகளும் கோடிட்டு காட்டுகின்றன.

இறைவன் எங்கும் எல்லோரிடமும் செயல்புரிகிறார். நம் உள்ளத்தை கடந்து அவர் செயல்புரிபவர் என்பதால் தான் அவரைக் கட+வுள் என்கிறோம்.

– திருத்தொண்டர் வளன் அரசு

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: