எண்ணங்கள் நல்ல எண்ணங்களாக இருக்கட்டும்

யூதர்களின் நோன்பு என்பது ஒரு பெரிதான காரியம் அல்ல. காலை 6.00 மணியிலிருந்து மாலை 6.00 மணி வரை நோன்பு நேரம். அதற்கு பிறகு வழக்கமான உணவு உண்ணலாம். பாரம்பரிய யூதர்களுக்கு நோன்பு என்பது வழக்கமான கடைப்பிடிக்கக்கூடிய ஒரு பழக்கம். ஆண்டிற்கு ஒருமுறை பாவக்கழுவாய் நாள் அன்று, அனைத்து யூதர்களும் நோன்பிருப்பார்கள். இன்னும் சில பாரம்பரிய யூதர்கள் வாரத்தில் இருமுறை அதாவது திங்களும், வியாழனும் இருந்தார்கள். இதைத்தான் இந்த நற்செய்தியிலும் பார்க்கிறோம்.

இயேசு நோன்பிற்கு எதிரானவர் அல்ல. ஏனென்றால் நோன்பு என்பது ஒருவன் தன்னையே அடக்கி ஆள, உதவி செய்கின்ற ஒன்றாகும். வாழ்க்கையை இப்படித்தான் வாழ வேண்டும் என்ற உணர்வோடு, தன்னடக்கத்தோடு வாழத்தூண்டுகின்ற ஒன்றாகும். ஆனால், பரிசேயர்களை பொறுத்தவரையில், அவர்களின் நோன்பு சுய இலாபத்திற்கானதாக இருந்தது. தங்களை வெளிக்காட்டிக்கொள்ளும் வாய்ப்பாக, அவர்கள் நோன்பைக் கடைப்பிடித்தார்கள். தங்களை மற்றவர்களைவிட உயர்வாக எண்ணுவதற்கும் நோன்பு ஒரு காரணமாக அமைந்தது. இதை இயேசு கண்டிக்கிறார்.

எந்தவொரு செயல்பாடும், நல்ல நோக்கத்தோடு, எண்ணத்தோடு அமைய வேண்டும். அப்படி அமையவில்லையென்றால், அது கேள்விக்குள்ளாக்கப்படும். நமது செயல்பாடுகள் நல்ல எண்ணத்தோடு, செயல்பாட்டோடு அமைய வேண்டும். அதற்கான அருளை ஆண்டவரிடம் மன்றாடுவோம்.

~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

%d bloggers like this: