எப்போதும் நன்றி மறவாது இருப்போம்

கடவுளிடம் நாம் பல விண்ணப்பங்களை வைத்து நம்பிக்கையோடு மன்றாடுகிறோம். நாம் கேட்பதை பெற்றுக்கொண்ட பிறகு, நமது மனநிலை என்ன? என்பதுதான், இன்றைய நற்செய்தி (லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 17: 11-19) நமக்குத்தரக்கூடிய செய்தியாக இருக்கிறது. தேவை இருக்கிறபோது, ஓயாமல் கடவுளை தேடுகிற நாம், தொந்தரவு செய்கிற நாம், நமது தேவை நிறைவேறிய பிறகு, கடவுளை நாடாதவர்களாக இருப்பது தான், இன்றைய உலக நியதி. அதைத்தான் இந்த வாசகமும் பிரதிபலிக்கிறது.

பத்து தொழுநோயாளர்கள் இயேசுவைச் சந்திக்கிறார்கள். தொழுநோய் பாதிக்கப்பட்ட நபர், இயேசு வாழ்ந்த சமுதாயத்தில் எந்த அளவுக்கு வெறுத்து ஒதுக்கப்பட்டார் என்பது, அவர்கள் அனுபவித்திராத ஒன்றல்ல. முழுமையாக அறிந்திருக்கிறார்கள். அனுபவித்திருக்கிறார்கள். அவர்கள் இயேசுவை நாடி தேடி வருகிறபோது, மனம் கசிந்துருகி மன்றாடுகிறார்கள். ”ஐயா, எங்கள் மீது மனமிரங்கும்” என்று சொல்கிற, அந்த தொனியே, அவர்கள் எந்த அளவுக்கு நம்பிக்கையிழந்து இருக்கிறார்கள் என்பதையும், அவர்களது பரிதாப நிலையையும் எடுத்துரைப்பதாக அமைந்திருக்கிறது. அவர்கள் குணமடைந்த பிறகு, அவர்களின் வாழ்வே மாறிவிட்ட பிறகு, அவர்களின் பழைய வாழ்வை, நொடிப்பொழுதில் மறந்துவிடுகிறார்கள். மீண்டுமாக, இந்த உலகம் சார்ந்த எண்ணம் அவர்களுக்குள்ளாக குடிகொண்டு விடுகிறது. அந்த நோய், அவர்களுக்கு வாழ்க்கையை இன்னும் முழுமையாகக் கற்றுத்தரவில்லை. நன்றியில்லாதவர்களாக இருக்கிறார்கள்.

இந்த உலகத்தில் வாழக்கூடிய மனிதர்களின் வாழ்க்கை இப்படித்தான் இருக்கிறது. நொடிப்பொழுதில் மாறக்கூடிய பச்சோந்திகளைப் போலத்தான், இடத்திற்கு தகுந்தாற்போல, சூழ்நிலைகளுக்கு ஏற்ப, தங்களை மாற்றிக்கொண்டு, தாங்கள் உயர்வதற்கு காரணமாக இருக்கிற, பலரை மறக்கக்கூடியவர்களாக இருக்கிறார்கள். நாம், அவர்களாக இருந்தால், மாறுவதற்கு, கடவுளின் அருளை வேண்டுவோம்.

~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

%d bloggers like this: