எருசலேமே! ஆண்டவரைப் போற்றுவாயாக

திருப்பாடல் 147: 12 – 13, 15 – 16, 19 – 20
”எருசலேமே! ஆண்டவரைப் போற்றுவாயாக”

எருசலேம் என்று சொல்லப்படுகிற வார்த்தை, இஸ்ரயேல் மக்களைக் குறிக்கக்கூடியதாக இருக்கிறது. எருசலேமில் அமைந்துள்ள ஆலயம் தான், கடவுள் வாழும் இல்லமாகக் கருதப்பட்டது. எருசலேமை யாரும் அழித்துவிட முடியாது என்கிற நம்பிக்கை, இஸ்ரயேல் மக்களின் உள்ளங்களில் ஆழமாகப் பதிந்திருந்தது. எருசலேம் படைகளின் ஆண்டவர் வாழும் கூடாரமாக அமைந்திருந்தது. அதுதான் பாதுகாப்பான இடமாக கருதப்பட்டது. எருசலேம் நகரம் வழிபாட்டின் மையமாகவும் விளங்கியது. இப்படி பல சிறப்புக்கள் வாய்ந்த எருசலேம் நகரம், ஆண்டவரைப் போற்ற வேண்டும் என்று திருப்பாடல் ஆசிரியர் வேண்டுகோள் விடுக்கிறார். அதாவது, இஸ்ரயேல் மக்கள் கடவுளைப் போற்ற வேண்டும் என்பதுதான் இதனுடைய மையப்பொருளாக இருக்கிறது.

இஸ்ரயேல் மக்கள் கடவுளைப் போற்றுவதற்கு என்ன இருக்கிறது? எதற்காக அவர்கள் கடவுளைப் போற்ற வேண்டும்? கடவுள் இஸ்ரயேல் மக்களை முழுமையாக அன்பு செய்கிறார். மற்ற இனத்தவரை விட, இஸ்ரயேல் மக்கள் மீது அளவுகடந்த அன்பு வைத்திருக்கிறார். அவர்களை கண்ணின் கருவிழி போல, எதிரிகளிடமிருந்து பாதுகாத்தார். கடவுளை முழுமையாக அறிந்தவர்கள் இஸ்ரயேல் மக்கள். வேறு எந்த மக்களுக்கும் கடவுள் தன்னை இந்த அளவுக்கு வெளிப்படுத்தியது இல்லை. இஸ்ரயேல் மக்கள் தான், கடவுளின் நெறிமுறைகளையும், நீதியையும் அறிந்திருந்தனர். ஆகவே, இஸ்ரயேல் மக்கள், தங்களை அன்பு செய்கிற கடவுள்பால் எப்போதும் உண்மையுள்ளவர்களாக இருந்து, அவரை முழுமையாக அன்பு செய்ய வேண்டும்.

கடவுள் இஸ்ரயேல் மக்களை அன்பு செய்தது போல, இன்றைக்கு நம் அனைவரையும் அன்பு செய்கிறார். ஒவ்வொருவரும் கடவுளின் பார்வையில் விலையேறப்பெற்றவர்களாக இருக்கிறோம். நம் அசைவுகள் ஒவ்வொன்றையும் ஆண்டவர் அறிந்தவராக இருக்கிறார். அந்த ஆண்டவர்பால், நமது உள்ளங்களை எழுப்புகிறவர்களாக வாழ்வோம்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

%d bloggers like this: