எல்லா மனிதர்களின் செயல்களும் ஆண்டவர் திருமுன் இருக்கின்றன

தாயின் வயிற்றிலிருந்து வெளி வந்த நாள் முதல் நிலம் என்னும் தாயிடம் எல்லோரும் அடக்கமாகும் நாள்வரை நம்முடைய செயல்கள் யாவும் ஆண்டவரின் திருமுன் உள்ளது.அவருக்கு மறைவானது ஒன்றுமில்லை.ஆண்டவரின் செயல்கள் யாவும் நல்லவையே.நம்முடைய ஒவ்வொரு தேவையும் குறித்த காலத்தில் அவர் நிறைவேற்றுகிறார்.’ இது அதைவிடக் கெட்டது ‘ என்று யாரும் சொல்ல முடியாது.அவரின் செயல்கள் அனைத்தும் அதனதன் காலத்தில் நல்லவை என விளங்கும்.ஆகையால் நாம் எந்த சூழ்நிலையிலும் நம்முடைய முழு உள்ளத்தோடு, எண்ணத்தோடு,பெலத்தோடு அவருக்கு வாயாரப் புகழ் பாடவேண்டும்.அவரின் பெயரை எப்பொழுதும் போற்றி துதிக்க வேண்டும்.

ஆண்டவரை நாம் எப்போதும் துதிக்க வேண்டும் என்று விரும்பியே அவர் நம்மை உருவாக்கி இந்த மண்ணுலகை ஆண்டுக்கொள்ளும்படி கொடுத்தார்.ஏதேன் தோட்டத்தைப் பண்படுத்தவும் பாதுகாக்கவும் ஆண்டவர் மனிதனை அங்கு கொண்டுவந்து குடியிருக்கச் செய்தார்.அவர் உருவாக்கிய எல்லாவற்றிக்கும் மனிதன் என்ன பெயர் எப்படி வைக்கிறான் என்று பார்க்கவே அவனிடம் கொண்டுவந்தார்.உயிருள்ள ஒவ்வொன்றிக்கும் அவன் என்ன பெயர் வைத்தானோ அதுவே இன்றுவரை நிலைத்திருக்கிறது.ஏனெனில் நம்முடைய செயல்கள்,திறமைகள்,யாவையும் அவர் அறிந்து வைத்துள்ளார்.அதற்காகவே நமக்கு அறிவையும்,புத்தியையும்,ஞானத்தையும் கொடுத்திருக்கிறார்.ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு திறமையை கொடுத்திருக்கிறார்.நாம் யாவரும் அவரின் உடலின் உறுப்பாக உள்ளோம்.

ஒரே உடலில் உறுப்புகள் பலவாக இருந்து செயல்படுவதுபோல நாமும் வெவ்வேறு இடத்தில் வெவ்வேறு மனிதர்களாக இருந்தாலும் நாம் எல்லோரும் அவரின் தூய ஆவியால் ஒரே உடலாய் இருக்கும்படி திருமுழுக்கு பெற்றோம்.அந்த ஒரே ஆவியையே பானமாகவும் பெற்றோம்.நாம் யாவரும் முழு மனத்தாழ்மையுடன் கனிவோடும்,பொறுமையோடும்,ஒருவரை ஒருவத் அன்புடன் தாங்கி அமைதியுடன் இணைந்து வாழ்ந்து ஆண்டவரின் ஒரே எதிர்நோக்கை நிறைவேற்ற அழைக்கப்பட்டிருக்கிறோம்.உடலும் ஒன்றே,தூய ஆவியும் ஒன்றே,ஆண்டவரும் ஒருவரே,நம் எல்லோருக்கும் கடவுளும்,தந்தையுமானவரும் ஒருவரே,அவரே எல்லோருக்கும் மேலானவர்;எல்லார் மூலமாகவும் செயலாற்றுபவர்;எல்லோருக்குள்ளும் இருப்பவரும் அவரே.முன்னே தூரமாய் இருந்த நாம் அவரின் ஒரே உடலின் இரத்தத்தால் எல்லோரும் அவரின் சமீபமாக அவரின் பிள்ளைகளாக இருக்கும்படி அழைக்கப்பட்டிருக்கிறோம் என்பதில் ஐயம் ஒன்றும் இல்லையே.!!!

ஆகையால் அன்பானவர்களே!நம்முடைய செயல்களுக்கு தக்க பலனைப் பெற்றுக்கொள்ள ஒவ்வொருவரும் ஆண்டவரின் திருவுளம் அறிந்து அவரின் திருவுளத்தை நிறைவேற்றி இந்த உலகில் மட்டுமல்ல, மறு உலகத்திலும் அவரோடு நாம் என்றென்றும் வாழ அழைக்கப் பட்டவர்களாய் அவரைப்போல் அன்பும்,பொறுமையும்,பெற்று ஒருவரை ஒருவர் குற்றம் சொல்லாமல் வெறுக்காமல் அன்போடு நடந்து நம்முடைய செயல்பாட்டில் ஆண்டவரை மகிழப்பண்ணுவோம்.

இரக்கத்தின் மூலதனமான இறைவா!!

உம்மை போற்றுகிறோம்,புகழ்கிறோம்.இதோ,நாங்கள் யாவரும் உமது கரத்தின் கிரியைகள்.உம்மால் உருவாக்கப்பட்டவர்கள்.நாங்கள் மண் என்று நீர் அறிந்துள்ளீர்.எங்களின் எண்ணங்களும் செஉஅல்பாடுகலும் உமக்கு முன் எப்பொழுதும் இருக்கிறது.உமது இரக்கம் எங்கள்மீது இல்லாவிட்டால் இந்த பூமியில் ஒருவரும் உயிரோடு வாழ தகுதி அற்றவர்களாய் இந்த பூமி வெறுமையாய் இருக்கும்.ஆனால் தேவனே நீரோ இரக்கத்தில் மேலானவர்.அதனால் நாங்கள் இந்த பூமியில் வாழ்ந்துக்கொண்டு இருக்கிறோம்.எங்கள் குற்றங்கள்,பாவங்கள்,அனைத்தையும் ஒவ்வொரு நாளும் உம்மிடம் அறிக்கையிடுகிறோம்.நீர் தாமே அவற்றை ஒரு பொருட்டாக எண்ணாமல் எங்களை மன்னித்து ஏற்றுக்கொண்டு உமது நித்திய வாழ்வை தந்தருள வேண்டுமாக மீட்பர் இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் வேண்டுகிறோம் எங்கள் தந்தையே!

ஆமென்! அல்லேலூயா!!.

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: