எளிய உள்ளம்

இந்த உலகத்திலே பலர் தங்களை ஞானிகளாகக் காட்டிக்கொள்கிறார்கள். தங்களுக்கு அறிவிருப்பதால், தங்களது அறிவாற்றலைக்கொண்டு பலவற்றை அறிந்திருப்பதால், எல்லாம் தஙக்ளுக்குத் தெரியும் என்கிற எண்ணம் அவர்களுக்குள்ளாக மேலோங்கியிருக்கிறது. ஆனால், இவர்களை நாம் ஞானிகளாக ஏற்றுக்கொள்ள முடியாது. அப்படியென்றால், உண்மையான ஞானி யார்? என்ற கேள்வி நமக்குள்ளாக எழும். இந்த உலகத்தில், யாரெல்லாம் கடவுளைப்பற்றிக் கொண்டு, தங்களது வாழ்வை நகர்த்திக்கொண்டிருக்கிறார்களோ, அவர்கள் தான் ஞானிகள். தங்களது அறிவுச்செருக்கினால், தங்களின் எண்ணத்தை, சிந்தனையை முன்னிறுத்தி வாழ்கிறவர்கள், ஞானிகளாக இருக்க முடியாது.

இயேசு வாழ்ந்த காலத்தில், பரிசேயர், மறைநூல் அறிஞர், சதுசேயர் தங்களின் அறிவாற்றலைக்கொண்டு எல்லாம் சாதித்து விட முடியும் என்று நினைத்தார்கள். தாங்கள் சொல்வதுதான் சரி என்றும் அவர்கள் எண்ணினார்கள். கடவுளை அவர்கள் உயர்த்திப்பிடித்தாலும், தாங்கள் கடவுளையும் மிஞ்சியர்வர்கள் என்னும் எண்ணம், அவர்களது சிந்தனையில் ஊறிப்போயிருந்தது. இத்தகைய எண்ணத்தோடு வாழ்ந்தவர்களைத்தான், இயேசு கண்டிக்கிறார். கடவுள் இல்லாமல், தங்களது அறிவினால் அனைத்தையும் சாதித்து விடலாம் என்று எண்ணுகிறவர்களின் மனநிலையை இங்கே படம்பிடித்துக்காட்டி, அவர்களது எண்ணத்தை உடைத்தெறிகிறார் இயேசு.

இயேசுவை அறிந்துகொள்ள, அனுபவிக்க அறிவாற்றல் தேவை இல்லை. எளிய உள்ளம் போதும். பணம், பதவி, அதிகாரம் தேவையில்லை. மற்றவர்கள் மீது கரிசனை கொள்கிற உள்ளம் போதும். எளிய உள்ளத்தோடு, இயேசுவின் கரம் பற்றி நடப்போம்.

~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.