ஏற்றுக்கொள்ளுதல்

யோசேப்பு கனவில் தனக்கு சொல்லப்பட்டதை ஏற்றுக்கொண்டு, மரியாவை ஏற்றுக்கொண்டார் என்று நற்செய்தி சொல்கிறது. “ஏற்றுக்கொள்ளுதல்” என்பது நமது வாழ்வின் முக்கியமான பண்பு என்றால் அது மிகையாகாது. யாரை ஏற்றுக்கொள்ள வேண்டும்? எப்படி ஏற்றுக்கொள்ள வேண்டும்? சூழ்நிலையின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட வேண்டிய கேள்வி இது. உதாரணமாக, யோசேப்பின் வாழ்வில் நாம் நடந்ததைப் பார்ப்போம்.

யோசேப்புவிற்கு மரியா திருமண ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். அவர்கள் கூடிவாழும் முன் மரியா கருவுற்றிருக்கிறார். இதனை நமது வாழ்வோடு நாம் தொடர்புபடுத்திப் பார்ப்போம். நமக்கு நிச்சயம் செய்யப்பட்டிருக்கிற ஒரு பெண், திருமணத்திற்கு முன்பாகவே கருவுற்றிருக்கிறாள் என்கிற செய்தி கேள்விப்பட்டால், நாம் செய்வது என்னவாக இருக்கும்? உடனடியாக திருமணத்தை நிறுத்துவோம். பெண் வீட்டாரை ஏளனம் செய்வோம். மற்ற ஒன்றுமே நமது எண்ணத்திற்குள் வராது. ஆனால், யோசேப்பு அப்படிப்பட்ட பெண்ணை ஏற்றுக்கொள்ள முன்வந்தால், அது அவரது பெருந்தன்மை அல்ல, மாறாக, நிகழ்வுகளை ஆராய்ந்து பார்த்து முடிவெடுக்கக்கூடிய திறன். எடுத்தோம், கவிழ்த்தோம் என்றில்லாம் ஒன்றை பொறுமையாக ஆராய்ந்து பார்ப்பதால் எடுக்கக்கூடிய முடிவு. அதனடிப்படையில் ஏற்றுக்கொள்ளக்கூடிய மனப்பக்குவம். இதுதான் யோசேப்பை தனித்துவமிக்க மனிதராக அடையாளம் காட்டியது.

நமது வாழ்விலும் யோசேப்பிடம் காணப்படக்கூடிய இந்த “ஏற்றுக்கொள்ளக்கூடிய” மனது நமக்கு வேண்டும். மற்றவர்களுடைய குறைகளை தவிர்த்துவிட்டு, அவர்களது நிறைகளை அலசி ஆராய்ந்து, நல்ல முறையில் உறவை பலப்படுத்துவதற்கான ஆசீர் வேண்டி, ஆண்டவரிடத்தில் மன்றாடுவோம்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: