ஏழை எளியவர்களின் கடவுள்

மறைநூல் அறிஞர்களுக்கு இன்றைய நற்செய்தி மூலம், இயேசு எச்சரிக்கை விடுக்கிறார். அவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை அடுக்குகிறார். தொங்கலான ஆடை என்பது, ஒரு மதிப்பைக் கொடுக்கக்கூடிய ஆடை. ஆடை தரையில் பட நடந்து வருவது, மேன்மையைக் குறிக்கக்கூடியதாக, மக்கள் மத்தியில் உணரப்பட்டது. ஏனென்றால், கடினமாக உழைப்பவர்களோ, அவசரமாக நடந்து செல்கிறவர்களோ, இந்த ஆடையை அணிய முடியாது. தங்களை மேன்மைமிக்கவர்களாக, தங்களுக்கு பணிசெய்ய வேலையாட்கள் இருக்கிறார்கள், என்பதைக் காட்டிக்கொள்ளக்கூடியவர்களால் மட்டும் தான், இதுபோன்ற ஆடைகளை அணிய முடியும். ஆக, மற்றவர்களை தங்களுக்குக் கீழானவர்களாக மதிக்கக்கூடிய எண்ணம் தான், அவர்களை தொங்கலான ஆடை அணியச்செய்திருக்கிறது.

சட்ட வல்லுநர்கள் தங்களுடைய போதனைகளுக்கு, எந்த கூலியும் பெற்றுக்கொள்ளக் கூடாது. தங்களது வாழ்விற்குத் தேவையான பொருளாதாரத்தை, செல்வத்தை அவர்கள், வேலை செய்து சம்பாதித்துக் கொள்ள வேண்டும். ஆனால், அப்படிச் செய்யாமல், ஏழை, எளியவர்களை ஏமாற்றி, தங்களுக்கு வேண்டியதை, கடவுளின் பெயரால் இவர்கள் பெற்றுக்கொண்டார்கள். சாதாரண, பாமர மக்களை ஏமாற்றிப்பிழைக்கக்கூடிய செயல்கள், நடத்தைகள் மதங்களில் இருப்பது கண்டிக்கத்தக்கது. அது அருவருக்கத்தக்கது.

இவ்வாறு, ஏழை, எளியவர்களை ஏமாற்றிப்பிழைக்கக்கூடிய இவர்களுக்கு கடவுள் நிச்சயம் தண்டனை கொடுப்பார், என்று இயேசு அவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கிறார். செய்யக்கூடிய ஒவ்வொரு செயல்களுக்கும் நிச்சயம் நாம் பதில் சொல்லியே ஆக வேண்டும், என்று நற்செய்தி சொல்கிறது. குறிப்பாக, ஏழை, எளியவர்களுக்கு செய்யக்கூடிய அநீதிக்கு கடுமையான தண்டனையை, கடவுள் நிச்சயம் கொடுப்பார். நமது வாழ்வில், ஏழை, எளியவர்கள் மீது அக்கறை காட்டுகிறவர்களாக மாறுவோம்.

~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

%d bloggers like this: