ஐசுவரியத்தைச் சம்பாதிக்கிறதற்கான பெலனை நமக்கு கொடுப்பவர் ஆண்டவர். உபாகமம் 8:18.

கர்த்தருக்குள் அன்பான சகோதர, சகோதரிகளுக்கு நம்முடைய தேவனாகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் நல்வாழ்த்துக்கள்.

இந்த நாளிலும் வாழ்க்கையில் ஏற்படும் பலவிதமான பிரச்சனைகளினால் சிக்கித் தவிக்கும் உங்களுக்கு ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து உங்கள் தேவைகள் அனைத்தையும் சந்தித்து உங்களை ஆற்றி தேற்றி, ஆறுதல் அடையச் செய்வார். கடன் பிரச்சனை, வீட்டில் வறுமை, நோய்களினால் தொல்லை, குடும்பத்தில் சமாதானம் இல்லாமல் தவிக்கும் உங்கள் ஒவ்வொருவருக்கும் உங்கள் தேவைகளை சந்திக்கவே, அதாவது உங்களுடைய பின்நாட்களில் உங்களுக்கு நன்மை செய்யும் பொருட்டே, இந்த நாட்களில் ஆண்டவர் உங்களை சில பாடுகளின் வழியாக அழைத்து செல்கிறார். உங்களை சிறுமைபடுத்தி, சோதித்து பின்னர் தமது மகிமையின் ஐசுவரியத்தினால் நீங்கள் ஐசுவரியவானாகும்படி செய்யவே ,அதை சம்பாதிக்கும் திறமையையும், பெலனையும், அறிவையும்,ஞானத்தையும் கொடுக்கிறார்.

கொஞ்சக்காலம் கஷ்டப்படுகிற உங்களை சீர்படுத்தி, ஸ்திரப்படுத்தி, பலப்படுத்தி நிலைநிறுத்துவார். ஆகையால் இந்த நாளில் உள்ள பாடுகளை நினைத்து மனம் சோர்ந்து போகாமல் அதை பொறுமையோடு சகித்து ஆண்டவரிடத்தில் விண்ணப்பம் செய்தால் நீதியுள்ள தேவன் உங்களின் மன்றாட்டை ஒருபோதும் தள்ளிவிடாமல் கேட்டு உங்களுக்கு உதவிச் செய்வார். அவரின் சித்தத்தின்படி மாத்திரம் கேட்டு அவர் அளிக்கும் நன்மையால் திருப்தியாகி சந்தோஷமாக வாழ்ந்திருக்கும்படி அருள் புரிவார். அவரே உங்களை தேடி வந்து ஆசீர்வதிப்பார். உங்கள் மனவிருப்பத்தின்படி தந்தருளி உங்களின் ஆலோசனைகளின்படியும் நடத்தி செல்வார்.

நீங்கள் சிறுமைப்பட்ட நாட்களுக்கு கூடுதலாக இரட்டிப்பான நன்மைகளால் நிரப்பி உங்களை காத்து ஆசீர்வதிப்பார். ஏனெனில் அவர் சொல்ல அப்படியே ஆகும்,அவர் கட்டளையிட அப்படியே நிற்கும்.

வேதத்தில் நியாயாதிபதிகள் புத்தகத்தில் 6ம் அதிகாரத்தில் கிதியோனை பற்றி வாசிக்கிறோம். கிதியோனுக்கு தரிசனமான ஆண்டவர் அவரை நோக்கி பராக்கிரமசாலியே கர்த்தர் உன்னுடன் இருக்கிறார். உனக்கு இருக்கிற இந்த பலத்தோடே போ: நீ இஸ்ரவேலை மீதியானியரின் கைக்கு நீங்கலாக்கி ரட்சிப்பாய்: உன்னை அனுப்புகிறவர் நானல்லவா என்றார். அதற்கு கிதியோன் ஆண்டவரே, நான் இஸ்ரவேலை எதினாலே இரட்சிப்பேன்: இதோ, மனாசேயில் என் குடும்பம் மிகவும் எளியது. என் தகப்பன் வீட்டில் நான் எல்லோரிலும் சிறியவன் என்று சொல்கிறான். அதற்கு ஆண்டவர் நான் உன்னோடே கூட இருப்பேன்: ஒரே மனுஷனை முறிய அடிப்பதுபோல நீ மீதியானரை முறிய அடிப்பாய் என்று ஆண்டவர் அவனுக்கு வாக்கு கொடுத்து தமது வாக்கை நிறைவேற்றுகிறார். கிதியோனை வெற்றி பெற செய்து அவன் மூலம் இஸ்ரவேலை காப்பாற்றுகிறார்.

இன்றும் அன்பானவர்களே! நீங்களும் இந்த மாதிரியான எந்த மாதிரியான கஷ்டமாக இருந்தாலும் உங்கள் ஒவ்வொருவருடனும் ஆண்டவர் கூடவே இருந்து நீங்கள் பாடுகள் அனுபவிக்கும் எல்லா கஷ்டத்திலும் இருந்து உங்களுக்கு விடுதலை அளித்து உங்களோடு கூடவே இருந்து பாதுகாத்து வழிநடத்துவார்.மகிமையை ஆண்டவருக்கே செலுத்துங்கள்.

ஜெபம்

அன்பின் இறைவா! உம்மை போற்றுகிறோம், புகழ்கிறோம், நீர் உமது பிள்ளைகளுடன் கூடவே இருந்து அவர்கள் சிறுமைப்பட்ட நாட்களுக்கு பதிலாக இரட்டிப்பான நன்மைகளால் நிரப்பி பாதுகாத்து கொள்ளும். ஐசுவரியத்தை சம்பாதிக்கும் பெலனை அவர்களுக்கு கொடுத்து பெலப்படுத்தி பாதுகாத்து கொள்ளும். நீர் ஒவ்வொருவரையும் தேடி சென்று ஆசீர்வதிக்கும் தேவனாய் இருக்கிறீர்.உமக்கு கோடி நன்றி. எல்லா கஷ்டத்திலும்,தொல்லையிலும் இருந்து மீட்டு கிதியோனுக்கு உதவி செய்தது போல கேட்கும் ஒவ்வொருவருக்கும்உதவி செய்து தேவைகளை கொடுத்தருளும்.மீட்பர் இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் நல்ல பிதாவே!ஆமென்!!அல்லேலூயா!!!

You may also like...

Leave a Reply

%d bloggers like this: