ஒருவரோடொருவர் சமாதானமுள்ளவர்களாய் இருப்போம். மாற்கு 9:50.

நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் ஒவ்வொருவருக்கும் எங்கள் அன்பின் நல்வாழ்த்துக்கள்.

இந்த நாளிலும் நாம் ஒவ்வொருவரும் நம்மால் கூடுமட்டும் எல்லோரிடமும் சமாதானமுள்ளவர் களாய் வாழ்ந்து நம்முடைய ஆண்டவரின் திருசித்தத்தை நிறைவேற்றுவோம். நமக்கு அமைதியை தருபவர் அவரே! சமாதானத்தை உங்களுக்கு விட்டுச் செல்கிறேன். என் சமாதானத்தையே உங்களுக்கு அளிக்கிறேன், நான் உங்களுக்கு தரும் சமாதானம் உலகம் தரும் சமாதானம் போன்றது அல்ல. நீங்கள் உள்ளம் கலங்க வேண்டாம். மருள வேண்டாம் என்று நம் தேவன் நமக்கு யோவான் 14:27ல் நமக்கு வாக்கு அருளியிருக்கிறார். வாக்கு அளித்த நம் கடவுள் உண்மையுள்ளவர். அதை கடைசி வரை நமக்கு நிறைவேற்றுவார்.

இன்றும் நம்மில் எத்தனை பேர் எல்லோரிடமும் அன்பு செலுத்துகிறோம் என்று நம்முடைய இருதயத்தை ஆராய்ந்து பார்ப்போம். இயேசுவின் பாதையில் நடக்கிற நாம் அவர் காட்டிய வழியில் இருக்கிறோமா? நம்மையே உயிருள்ள பலியாக அவருக்கு படைக்கிறோமா? அவருக்கு உகந்த வாழ்வை வாழ்கிறோமா?என்று நம்மை ஆராய்ந்து நம்மிடத்தில் இருக்கும் தவறுகளை அகற்றி நம் தேவன் விரும்பும் வகையில் நடக்கிறோமா?என்று யோசித்து செயல்படுவோம். அவ்வாறு செயல்படுவதே அவருக்கு நாம் செய்யும் உள்ளார்ந்த வழிபாடாகும். இந்த தவக்காலத்தில் நாம் எல்லோரும் அவர் விரும்பும் பிள்ளைகளாய் வாழ்ந்து அவரின் மனவிருப்பத்தை நிறைவேற்றி அவருக்கு உகந்தவர்களாய் மாறி நம்முடைய அமைதியை பெற்றுக்கொள்வோம்.

நம்முடைய மாம்ச சிந்தனைகளை அகற்றி, ஆவிக்குரிய மனநிலையை பெற்று வாழ்வையும், சமாதானத்தையும் பெற்று வாழ்ந்து பிறரையும் வாழ வைப்போம். சகோதர,சகோதரிகளே, நாம் எப்பொழுதும் கடவுளோடு மகிழ்ச்சியாய் இருப்போம். நம் நடத்தையை சீர்படுத்துவோம். ஆண்டவரின் அறிவுரைக்கு செவிசாய்த்து எல்லோரிடமும் ஒற்றுமையாக இருப்போம். அமைதியுடன் வாழுவோம். அப்பொழுது அன்பும், அமைதியும் அளிக்கும் நம் தேவன் நம்மோடு இருப்பார். ஏனெனில் பகைமை என்னும் சுவரை தமது உடலில் ஏற்று துன்பத்தின் வழியாய் அதை தகர்த்தெறிந்து நாம் ஒவ்வொருவரும் ஒற்றுமையாக இணைந்து புதிய மனிதர்களாய் வாழும்படிக்கு நம்மில் அமைதியும்,சந்தோஷமும் ஏற்படும்படிக்கு அவர் சிலுவை சுமந்து உயிரை கொடுத்து அவரோடு ஒப்புரவாக இவ்வாறு செய்தார். அவரின் சொற்படி கேட்டு அன்பே நமக்கு ஆணிவேராகவும், அடித்தளமாகவும்,அமைவதாக!!!

ஜெபம்

அன்பே உருவான இயேசுவே! உம்மை போற்றுகிறோம், துதிக்கிறோம், தேவரீர் நீர் எங்களுக்கு சமாதானம் தரும்படிக்கு உம்மையே சிலுவையில் பலியாக ஒப்புக்கொடுத்தீரெ உமக்கு நன்றி தகப்பனே. நாங்கள் சமாதானமாய் வாழ உம்மைடைய சமாதானத்தையே எங்களுக்காக கொடுத்தீரே, அதை நாங்கள் ஒருபோதும் மறவாமல் நீர் விரும்பும்படி வாழ்ந்து உமக்கு மகிமை சேர்க்க உதவி செய்யும். ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் பெயரால் வேண்டிக்கொள்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே! ஆமென்!!அல்லேலூயா!!!.

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: