ஒருவர் மற்றவருடைய சுமைகளைத் தாங்கிக் கொள்ளுங்கள். கலா 6:2

இந்த உலகில் ஆண்டவர் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வேலையை கொடுத்திருக்கிறார். நாம் நமக்கு கொடுத்திருக்கும் வேலையில் மட்டும் நம் கவனத்தை செலுத்தி அதை உண்மையோடும், நேர்மையோடும் செய்து ஆண்டவருக்கு பயந்து செயல்படுவோம். ஏனெனில் அவர் நம் ஒவ்வொருவருடனும் கூடவே இருந்து நம்மை கண்ணோக்கிக்கொண்டு தான் இருக்கிறார். நம் செயல்களை ஆராய்ந்துப் பார்த்து நம்மைபிறரோடு ஒப்பிடாமல் நம்மையே பெருமை பாராட்டாமல் நம் சுமையைத் தாங்கிக்கொண்டு நம்மால் முடிந்த உதவிகளை பிறர்க்கு செய்து அவர்களுடைய சுமையையும் தாங்கிக்கொள்வோம்.

இதற்காகவே ஆண்டவர் நம்மை அழைத்திருக்கிறார். ஒரே சபையாக ஒரே குடும்பமாக ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து அன்பின் பாதையில் நடந்து ஆண்டவரின் திருநாமத்திற்கு புகழையும், மகிமையையும் சேர்த்து, நன்மை செய்வதில் சோர்ந்து போகாமல் ஆண்டவரின் மேல் நம்பிக்கை கொண்டோரின் குடும்பத்துக்கு நன்மை செய்ய முன் வருவோம்.அவர்களின் சுமைகளை நாமும் தாங்கினால் அப்பொழுது ஆண்டவர் நம்மேல் இன்னும் அன்பு வைத்து நம்மை அதிகதிகமாய் ஆசீர்வதிப்பார்.

சகோதரர் ஒன்றுபட்டு வாழ்வது எத்துனை நன்று. எத்துனை இனியது. அது ஆரோனின் தலையினிலே ஊற்றப் பெற்ற நறுமணத்தைலம் அவருடைய தாடியினின்று வழிந்தோடி அவர்தம் அங்கியின் விளிம்பை நனைப்பதற்கு ஒப்பாகும். அது எர்மோனின் மலைப்பனி சீயோனின் மலைகள் மேல் இறங்குவதற்கு ஒப்பாகும். ஏனெனில் அங்கிருந்தே என்றுமுள வாழ்வென்னும் ஆசிதனை ஆண்டவர் பொழிந்தருள்வார் என்று திருப்பாடல்கள் 133:1,2,3,ஆகிய வசனங்களில் வாசிக்கிறோம் .

இந்த உலகத்திற்கு நாம் கொண்டு வந்தது என்ன? கொண்டு செல்வது என்ன? திருத்தூதர் கற்பித்தவற்றிலும் நட்புறவிலும் அப்பம் பிடுவதிலும் இறைவேண்டலிலும் உறுதியாய் நிலைத்திருந்தார்கள். மக்கள் அனைவரிடமும் அச்சம் நிலவியது.திருத்தூதர் வழியாகப் பல அருஞ்
செயல்களும் அடையாளங்களும் நிகழ்ந்தன. நம்பிக்கை கொண்டோர் அனைவரும் ஒன்றாயிருந்தனர். எல்லா உடைமைகளையும் பொதுவாய் வைத்திருந்தனர். நிலபுலன்களும் பிற உடைமைகளும் உடையோர் அவற்றை விற்று, அனைவருக்கும் அவரவர் தேவைகளுக்கேற்பப் பகிர்ந்தளித்தனர். ஒவ்வொருநாளும் அவர்கள் ஒரே மனத்தோடு கோவிலில் தவறாது கூடிவந்தார்கள். உணவை பகிர்ந்து உண்டு கடவுளை போற்றி வந்தார்கள். தி.பணிகள் 2:42 to 47.ல் வாசிக்கிறோம். இப்பொழுது வாழ்கின்ற நாமும் இதை வாசிப்பதோடு அல்லாமல் செயல்படுத்தி ஒருவர் பாரத்தை ஒருவர் சுமந்து ஆண்டவரின் கட்டளைக்கு பயந்து,கீழ்படிந்து, அவரின் சித்தத்தை நிறைவேற்றுவோமாக!!

ஜெபம்

அன்பும், இரக்கமும், கருணையும் நிறைந்த எங்கள் ஆண்டவரே! உம்மை போற்றுகிறோம், புகழ்கிறோம். உம்முடைய அன்பினால் எங்களை நிறைத்தருளும். உம்மைப்போல் வாழ கற்றுத்தாரும். எங்கள் சகோதர, சகோதரிகளிடம் அன்புக்கூர்ந்து அவர்களின் சுமைகளை நாங்களும் ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு எங்களால் முடிந்த உதவிகளை செய்ய எங்கள் மனதை நல்வழிப்படுத்தும். நன்மைசெய்வதில் நாங்கள் ஒருநாளும் சோர்ந்து போகாமல் இருக்க உதவி செய்யும். உம்முடைய தூய ஆவி எங்களுக்கு அனுதினமும் போதித்து வழிநடத்துவாராக. துதி, கனம், மகிமை யாவும் உம் ஒருவருக்கே உண்டாகட்டும்.ஆமென்!அல்லேலூயா!!.

You may also like...

Leave a Reply

%d bloggers like this: