ஒரு துண்டு காகிதம்

ஒரு நாள் 10 வயது நிரம்பிய ஒரு சிறுமி ரோட்டில் மிகவும் கவலையோடு நடந்து போய்க்கொண்டு இருந்தாள். அப்போது வழியில் கீழே ஒரு துண்டு காகிதம் கிடந்தது. அதைப்பார்த்து குனிந்து எடுத்தாள் . அதில் இருந்த வாசகத்தை அவள் படித்தாள் . ” ஜெபத்தைக் கேட்கிறவர் இயேசுகிறிஸ்து ” என்று எழுதியிருந்தது. அதைப்படித்ததும் அவள் உள்ளத்தில் இரு தெய்வீக சமாதானம் ஆட்கொண்டது. ஆனால் அவளுக்கோ இயேசுகிறிஸ்து யார்? என்று தெரியாது. யார் இந்த இயேசுகிறிஸ்து ? அவர் எப்படி இருப்பார் ? இவர் என்னுடைய ஜெபத்தைக் கேட்பாரா ? என் ஆசையை கவலையை தீர்த்து வைப்பாரா? என்று யோசித்துக்கொண்டே தனது வீடு வந்து சேர்ந்தாள் .

வீட்டில் நுழையும் போதே தன் அப்பாவும், அம்மாவும் சண்டைப்போடும் சத்தம் காதில் விழவே பயந்து அப்படியே கவலையோடு ஒரு மூலையில் பதுங்கி நின்றாள். அவள் அப்பாவோ தினமும் குடித்து விட்டு வந்து அம்மாவை அடிப்பார். இது தினம், தினம் நடக்கும் சம்பவம். இவள் அருகில் போனால் இவளுக்கும் அடி கிடைக்கும். அதனால் பயந்துக்கொண்டு ஒரு மூலையில் பதுங்கி நின்றாள். இதைப்பார்த்து பார்த்து அவள் மனம் அன்புக்காகவும், சமாதானத்துக்காகவும், ஏங்கியது.

மறுநாள் வழக்கம்போல் தான் படிக்கும் பள்ளிக்கு சென்றாள். ஆனால் அந்த துண்டு காகிதத்தைப்பற்றி யாரிடமாவது கேட்க வேண்டும் என்று அவள் உள் மனதில் தோன்றிக்கொண்டே இருந்தது. பக்கத்தில் இருந்த தன் தோழியிடம் கேட்டுப்பார்க்கலாமே என்று நினைத்து, அவளிடம் அந்த துண்டு காகிதத்தைக்காட்டி இயேசுகிறிஸ்து யார்? அவர் நம் ஜெபத்தை கேட்பாரா ? என்று கேட்டாள். அந்த தோழி ஒரு கிறிஸ்துவப்பெண் என்பதால் ” ஓ ” எனக்குத் தெரியுமே, நாங்கள் எங்கள் வீட்டில் அவரைத்தான் கடவுளாக வணங்கிக்கொண்டு இருக்கிறோம். அவரே நம்முடைய
எல்லா தேவைகளையும் நிறைவேற்றுவார். அவரே நமக்காக மரித்து அடக்கம் பண்ணப்பட்டு மூன்றாம் நாள் உயிரோடு எழுந்தவர் என்று சொன்னாள். உடனே இந்தப் பெண்ணுக்கு ஒரே சந்தோஷம். நீ எனக்கு அவரைப்பற்றி சொல். நான் அவரிடம் எப்படி கேட்டு பெற்றுக்கொள்வது ? என்று எனக்கு சொல்லித்தா என்று கேட்டாள். சரி இன்று பள்ளி முடிந்தவுடன் மாலை நாம் எங்கள் வீட்டுக்கு போகலாம். என் அம்மா உனக்கு எல்லாவற்றையும் சொல்லித்தருவார்கள், என்று சொல்லி அவளை மாலை அவள் வீட்டுக்கு அழைத்து சென்று அவள் அம்மாவிடம் அறிமுகம் செய்து வைத்தாள் .

அந்த தாயார் அந்தப் பெண்ணை அன்போடு உபசரித்து அவளைப்பற்றி விசாரித்து அறிந்துக்கொண்டார். பிறகு இயேசுவைப் பற்றி சொல்லி, அவளுக்காக முழங்கால் படியிட்டு ஆண்டவரிடம் கண்ணீரோடு ஜெபித்தார்கள். அவள் அப்பா குடியின் அடிமைத்தனத்தில் இருந்து விடுபடவேண்டும், அவள் வீட்டில் சந்தோஷம் நிலவ வேண்டும், என்று சொல்லி கெஞ்சி மன்றாடி ஜெபித்தார்கள். அந்த பெண்ணுக்கோ ஒரு விதமான சந்தோஷம் அவள் உள்ளத்தை நிரப்பியது. அவளுக்குள் ஒரு அசைக்க முடியாத நம்பிக்கை துளிர்விட்டது. தினமும் பள்ளி முடிந்து மாலையில் தன் தோழியின் வீட்டுக்குச் சென்று ஆண்டவரைப்பற்றியும், அவரது அன்பைப்பற்றியும் அறிந்துக்கொண்டாள்.

வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை ஆலயத்துக்கு சென்றாள் . வேதம் படிக்க ஆரம்பித்தாள் இயேசு அவளோடு இருந்து செயல்பட ஆரம்பித்தார். அவள் கண்ணீருக்கு பதில் கிடைத்தது. அவள் அப்பா கொஞ்ச, கொஞ்சமாக குடியை மறக்க ஆரம்பித்தார். நன்கு சம்பாதிக்க ஆரம்பித்தார். அந்த குடும்பத்தில் சந்தோஷமும், சமாதானமும், நிலவியது. ஒரு சிறு பெண்ணின் ஜெபத்தைக் கேட்டு ஆண்டவர் அந்த குடும்பத்தை ஆசீர்வதித்து உயர்த்தி காத்துக்கொண்டார். ” ஜெபத்தை கேட்பவரே! மனிதர்கள் யாவரும் உம்மிடம் வருவார்களாக . சங்கீதம் 65 : 2.

அன்பான சகோதரர்களே!! நீங்கள் யாராவது இந்த குடிக்கு இந்த குடிக்கு அடிமையாகி உங்களையும் பாழாக்கி, உங்கள் குடும்பத்தையும் பாழாக்கிக்கொண்டு இருக்கிறீர்களா? கடவுளுக்கு எதிராகவும், உங்கள் குடும்பத்துக்கு எதிராகவும் பாவம் செய்கிறீர்களா? லூக்கா 15 : 21. உங்கள் மனைவியையும், குழந்தைகளையும், அடித்து துன்புறுத்துகிறீர்களா ? இதோ உங்களுக்காகாக சிலுவையில் தொங்கின இயேசுவை உற்றுப்பாருங்கள். நீங்கள் குடிக்கும் மதுவைவிட, ஆண்டவரின் இரத்தம் அதிகமான போதையை தரும். அதைக் குடியுங்கள்..மனம் மாறுங்கள்..உங்கள் உடல் ஆண்டவர் தங்கும் ஆலயம் என்பதை மறவாதீர்கள். இதோ விவிலியம் சொல்லும் ஆண்டவரின் வார்த்தை உங்களோடு பேசவேண்டுமாக விரும்பி, ஜெபித்து இதை எழுதுகிறேன். ஏனெனில் நானும் இந்த வழியாக வந்தவள் ,என்பதால் அதின் கஷ்டங்களும் , ஏக்கங்களும் என்னெவென்று நன்குத் தெரியும்.

துன்பக் கதறல், துயரக் கண்ணீர், ஓயாத சண்டை, ஒழியாத புலம்பல், காரணம் தெரியாமல் கிடைத்த புண்கள், கலங்கிச் சிவந்திருக்கும் கண்கள் – இவை அனைத்தையும் அனுபவிப்பவர் யார்?
திராட்சை இரச மதுவில் நீந்திக் கொண்டு இருப்பவர்களே , புதுப்புது மதுக் கலவையைச் சுவைத்துக் களிப்பவர்களே, மதுவைப்பார்த்து , இந்த இரசத்தின் சிவப்பென்ன ! பாத்திரத்தில் அதன் பளப்பளப்பென்ன ” ! எனச் சொல்லி மகிழாதீர். அது தொண்டைக்குள் செல்லும்போது இனிமையாயிருக்கும்; பிறகோ அது பாம்பு போலக்கடிக்கும்; விரியனைப் போலத் தீண்டும். உன் கண் என்னென்னவோ வகையான காட்சிகளைக் காணும்; உன் உள்ளத்திலிருந்து ஏறுமாறான சொற்கள் வெளிப்படும். கடல் அலைமீது மிதந்து செல்வது போலவும், பாய்மர நுனியில் படுத்துறங்குவது போலவும் உனக்குத்தோன்றும். என்னை அடித்தார்கள், எனக்கு நோகவில்லை, என்னை அறைந்தார்கள், நான் அதை உணரவில்லை ; நான் எப்போது விழித்தெழுவேன் ? அதை இன்னும் கொடுக்கும்படி கேட்பேன் , என்று சொல்வீர்களோ? நீதிமொழிகள் 23 : 29 லிருந்து 35 வரை உள்ள வசனத்தில் படிக்கலாம்.

அன்பே உருவான இறைவா!!

உம்மை போற்றுகிறோம், புகழ்கிறோம். தேவரீர் ஆண்டவரே ! இதோ இந்த உலக மக்கள் யாவரும் உம்முடையவர்களே! நீர் அவர்களை உமது சாயலில் தோன்றப் பண்ணினீர். உம்மைப் போல் வாழ
உதவி செய்யும். பாவப்பிடியான குடிப் பழக்கத்துக்கு அடிமையாகி தவிக்கும் உமது பிள்ளைகள் மீது மனதுருகி அவர்கள் அதிலிருந்து விடுதலை அடையும்படி செய்யும். நீர் விடுதலை ஆக்கினால் மெய்யாகவே அவர்கள் விடுதலை ஆவார்களே. உம்மால் கூடாத காரியம் ஒன்றுமில்லையே! நீரே அந்தப் பழக்கத்தில் இருக்கும் ஒவ்வொருவர் மீதும் உமது அளவில்லா கிருபையை தந்து அவர் களின் பெலவீனத்தில் இருந்து காத்தருள வேண்டுமாக இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் பரலோகதந்தையே

ஆமென்! அல்லேலூயா!!!

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.