கடவுளாகிய ஆண்டவர் உன்னை உயர்த்துவார். இ.சட்டம்.28:1

அன்பானவர்களே! நமக்கு ஆண்டவர் விதிக்கும் அவருடைய கட்டளைகள் அனைத்தையும் கடைப்பிடித்தால் அப்போது உலகிலுள்ள மக்களினங்கள் அனைத்திற்கும் மேலாக கடவுளாகிய ஆண்டவர் நம்மை உயர்த்துவேன் என்று வாக்கு அருளியிருக்கிறார். அவர் அருளிய வாக்கை கடைப்பிடிப்பதில் ஒரு கஷ்டமும் இல்லையே! அப்படியிருக்க நாம் ஏன் அவர் விதிக்கும் கட்டளைக்கு கீழ்படிந்து செவிகொடுக்கக் கூடாது? ஏன் அதை கடைப்பிடிப்பதில் கருத்தாயிருக்கக் கூடாது? ஒவ்வொருவரும் யோசித்து அதன் வழியே நடப்போம்.

உலகப்பிரமாண காரியங்களில் நாம் ஈடுபட்டு இருக்கும் பொழுது நம் மேலதிகாரிக்கு எவ்வளவாய் பயந்து காரியங்களை செய்கிறோம். நமது ஆண்டவரோ வானத்தையும், பூமியையும், காற்றையும், கடலையும், உலகில் உள்ள யாவையையும் உண்டாக்கிய கடவுள். அப்படியிருக்க நாம் அவருக்கு எவ்வளவாய் பயந்து பயபக்தியோடு நடக்க வேண்டும் என்பதை ஒவ்வொருவரும் யோசித்து அதன்படியே செயல்படுவோம்.

நாம் அவ்வாறு நடந்தோமானால் அப்பொழுது நம் கடவுளாகிய ஆண்டவர் நம்மை உயர்த்தி நாம் செல்லும் இடமெங்கும் நம்மை ஆசீர்வதித்து காத்துக்கொள்வார்.கருவின் கனியையும், நிலத்தின் பயனையும் கால்நடைகளின் ஈற்றுகளையும், மாடுகளின் கன்றுகளையும், ஆடுகளின் குட்டிகளையும், நம் வீட்டில் உள்ள பொருளாதாரத்தையும் காத்து ஆசீர்வதித்து, நாம் போகையிலும், வருகையிலும் நம்மோடு கூடவே இருந்து காத்துக்கொள்வார்.

நமக்கு எதிராக வரும் பகைவர்களை முறியடிக்கும்படி அவர்களை நம்மிடம் ஒப்புக்கொடுப்பார். அவர்கள் ஒருவழியாய் நமக்கு எதிராக வருவார்கள். ஆனால் ஏழு வழியாய் நம் கண்களுக்கு முன்னே ஓடிப்போவார்கள். ஆண்டவர் நமக்கு கொடுக்கும் இடத்தில் நம்மை மற்றவர்களைவிட உயர்த்தி நம்மை உயர்ந்த இடத்தில் வைப்பார். அவர் சொன்னால் சொன்னதுதான். மனம் மாறமாட்டார். மனம் மாற அவர் மனிதர் அல்லவே.நாம் மேற்கொள்ளும் அனைத்து செயல்களிலும்
ஆசி வழங்கி அவருடைய நன்மைகளின் கருவூலமாகிய வானத்தையே நமக்காக திறப்பார்.நாம் பல்வேறு மக்களுக்கு கடன் கொடுப்போம். நாமோ வாங்க மாட்டோம். கடன் வாங்க நம்மை ஆண்டவர் கைவிடவே மாட்டார். நாம் ஒவ்வொருநாளும் நம்முடைய வாழ்வில் உயர்வையே காண்போம். நாம் தாழ்ந்துபோக நம்மை விடவேமாட்டார். ஆகையால் ஆண்டவர் நம்மை எல்லாவற்றிலும் உயர்த்த வேண்டுமானால் நாமும் அவரின் வார்த்தைக்கு கீழ்படிந்து நடந்து அவர் தரும் எல்லா ஆசீரையும் பெற்று மகிழ்வோடு வாழ்வோமாக!

ஜெபம்.

அன்பின் தெய்வமே! கருணைக்கடலே நீர் கட்டளையிடும் ஒவ்வொரு காரியத்தையும் கடைப்பிடித்து செயலாற்ற உதவி செய்தருளும். உமக்கு கீழ்படிந்து நடக்க நீர் விரும்பும் காரியத்தை செய்ய எங்களுக்கு போதித்து வழிநடத்தும். உம்முடைய திருச்சட்டத்தின் வார்த்தைகளை எல்லாம் கடைப்பிடித்து அதன்படியே வாழ எங்களை கரம் பிடித்து வழிநடத்தும். கண்ணின் மணியைப்போல் பாதுகாக்கும் ஆண்டவர் நீரே உமக்கே மகிமை உண்டாகட்டும். உமது உள்ளங்கையில் எங்களை பொறித்து வைத்துள்ளீர். தாயைப்போல் தேற்றுகிற தேவன் நீரே, எங்களை கீழாக்காமல் உயர்த்தும் ஆண்டவர் நீரே! உமக்கே மகிமையை செலுத்துகிறோம். கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் வேண்டிக்கொள்கிறோம் எங்கள் விண்ணகத்தந்தையே!ஆமென்!!அல்லேலூயா!!!.

You may also like...

Leave a Reply

%d bloggers like this: