கடவுளின் திருவுளம் அறிவோம்

தனது மகனைப்பற்றி செக்கரியா வைத்திருந்த எண்ண ஓட்டங்களை இங்கே இந்தப்பாடலின் வாயிலாக வெளிப்படுத்துகிறார். தனது மகனை சரியாகப்புரிந்து வைத்திருந்தார் என்பதைக்காட்டிலும், கடவுளின் திருவுளத்தை செக்கரியா நன்றாக அறிந்து வைத்திருந்தார். அதன் வெளிப்பாடு தான் அவருடைய இந்த விசுவாச மொழிகள். தனது மகனை இறைவாக்கினராகவும், வரப்போகிற மெசியாவின் முன்னோடியாகவும் செக்கரியா வெளிப்படுத்துகிறார்.

யூதர்கள் அனைவருமே வாக்களிக்கப்பட்ட மெசியாவிற்காகக் காத்திருந்தனர். பெரும்பாலான மக்கள், வாக்களிக்கப்பட்ட மெசியா வருவதற்கு முன்னதாக, எலியா வந்து, அவருடைய வழியைத்தயாரிப்பார் என்று நம்பிக்கையோடு காத்திருந்தனர். மலாக்கி 3: 1 ”இதோ! நான் என் தூதனை அனுப்புகிறேன். அவர் எனக்கு முன் வழியை ஆயத்தம் செய்வார். அப்பொழுது, நீங்கள் தேடுகின்ற தலைவர் திடீரெனத் தம் கோவிலுக்கு வருவார். நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் உடன்படிக்கையின் தூதர் இதோ வருகிறார்”. மலாக்கி 4: 5 – 6 ”இதோ! பெரியதும் அச்சத்தைத் தோற்றுவிப்பதுமான ஆண்டவரின் நாள் வருமுன், இறைவாக்கினர் எலியாவை நான் உங்களிடம் அனுப்புகிறேன். நான் வந்து உலகைச் சபித்துத்தண்டிக்காதபடி, அவர் பெற்றோரின் உள்ளங்களைப் பிள்ளைகளிடத்தும், பிள்ளைகளின் உள்ளங்களைப் பெற்றோரிடத்தும் திருப்புமாறு செய்வார்”. மேற்கண்ட இறைவார்த்தைகள் திருமுழுக்கு யோவான் தான் வரவிருந்த முன்னோடி என்பதற்கு ஆதாரமாக இருக்கிறது.

செக்கரியா கடவுளின் திருவுளத்தை அறிந்திருக்கிறார். அதற்கு அவர் கடவுளோடு இணைந்து இருந்ததுதான் காரணமாகும். கடவுளோடு நாமும் இணைந்திருந்தால், நிச்சயம் கடவுளின் திருவுளத்தை அறிந்து அதற்கேற்ப நமது வாழ்வை அமைத்துக்கொள்வோம்.

~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

%d bloggers like this: