கடவுளின் பிரசன்னம்

யோனா இறைவாக்கினர் நினிவே நகருக்கு ஆண்டவருடைய வார்த்தையை அறிவிக்கச் சென்றார். அவருடைய வார்த்தையை அறிவிக்கவும் செய்தார். இன்னும் நாற்பது நாளில் நினிவே அறிவிக்கப்படும் என்றார். மக்கள் மனம்மாறினர். கடவுளும் தனது எண்ணத்தை மாற்றிக்கொண்டார். அவர்களை அழிக்காது விட்டார். இது யோனாவுக்கு பெருத்த வருத்தத்தை ஏற்படுத்தியது. எனவே, கடவுளிடம் கோபித்துக்கொண்டு, அவர் தன் வழியே செல்கிறார். யோனாவின் வருத்தத்திற்கான காரணம் என்ன? அவர் ஓர் அருங்குறி, அதாவது அழிவு வரும் என்று எச்சரிக்கிறார். ஆனால், அது நடக்கவில்லை. எனவே, கடவுள் மீது கோபம் கொள்கிறார். ஆனால், யோனா ஒன்றை மறந்துவிடுகிறார். அவர் தான் நினிவே மக்களுக்கு கொடுக்கப்பட்ட அடையாளமேயன்றி, அவர் சொன்ன வார்த்தைகள் அல்ல. மக்கள் யோனாவை நம்பியதால் தான், அவருடைய வார்த்தைகளை நம்புகிறார்கள். எனவே, யோனாவே ஓர் அடையாளம். இந்த உன்னதமான கடவுளின் கொடையை, யோனா இறைவாக்கினர் புரிந்துகொள்ள தவறி விடுகிறார்.

இந்த உதாரணத்தைப் போலத்தான், இயேசுவின் காலத்தில் வாழ்ந்த பரிசேயர்கள், சதுசேயர்கள் மற்றும் மறைநூல் அறிஞர்கள். அவர்கள் இயேசுவின் போதனைகளிலும், அவருடைய நடவடிக்கைகளிலும் அருங்குறிகளைத் தேடுகிறார்கள். ஆனால், இயேசு தான் கடவுளின் அடையாளம் என்பதை, மறந்து விடுகிறார்கள். அருமையான கதை ஒன்று நினைவுக்கு வருகிறது. ஒருமுறை முல்லா மாட்டுவண்டி நிறைய மண் எடுத்து, ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு சென்று கொண்டிருந்தார். வழியில், எல்கையில் அவரை மறித்த காவலர்கள், வண்டி முழுவதும் ஏதாவது தென்படுகிறதா? என்று மணலை தோண்டி, தோண்டி பார்த்தனர். அவர்களுக்கு முல்லா, எதையோ ஒன்றை கடத்துகிறார் என்பது தெரிந்தது. ஆனால், என்னவென்று அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. இப்படி பலமுறை நடந்தது. இறுதியில், முல்லாவுக்கும் வயதாகிப்போக, அந்த காவலர்கள் அவரிடத்தில் “இப்போதாவது என்ன கடத்தினீர்கள் என்று சொல்லுங்கள். எங்களால் கடைசி வரை கண்டுபிடிக்க முடியவில்லையே” என்று கேட்டார்கள். முல்லா சொன்னார், ”நான் கடத்தியது வண்டி மாடுகளைத்தான். ஒவ்வொரு முறையும் வெவ்வெறு மாடுகளை, கடத்திக்கொண்டு வந்தேன்”. கண்ணிருந்தும் இவர்கள் குருடர்கள் தான், என்பதை இந்த கதை நமக்கு உணர்த்துகிறது.

நமது வாழ்விலும், கடவுளின் அடையாளங்கள், அருங்குறிகள் பலவிதங்களில் வெளிப்பட்டாலும், நாமும் கண்ணிருந்தும் குருடர்களாகத்தான் இருக்கிறோம். உண்மையை உணர முடியாதவர்களாகத்தான் இருக்கிறோம். கடவுளின் பிரசன்னத்தை எல்லாவிடத்திலும் உணர்வோம். கடவுளின் பிரசன்னம் எங்குமிருக்கிறது. அந்த பிரசன்னம் நம்மை வழிநடத்தட்டும்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.