கடவுளுக்கு உகந்த வாழ்க்கை

இயேசுகிறிஸ்து நேற்றும் இன்றும் என்றுமே மாறாதவர் என்று எபிரேயர் 13:8 ல் வாசிக்கிறோம். நம்முடைய ஆண்டவர் ஒருநாளும் மாறாவராய் இருக்க அவர் சாயலாய் படைக்கப்பட்ட நாமும் அவ்வாறே இருந்து அவருக்கு உகந்த வாழ்க்கையை வாழ்ந்து அவரின் நாமத்திற்கு மகிமை உண்டுபண்ணுவோம்.

ஆண்டவரின் கட்டளைக்கு கீழ்படிந்து சகோதர அன்பிலே நிலைத்திருந்து அன்னியரை வரவேற்று விருந்தோம்பல் செய்தோமானால் நாம் நம்மை அறியாமலே வானத்தூதர்களை மகிழ்ச்சி படுத்தியவர்களாய் இருப்போம். சிறைப்பட்டவர்களோடு நாமும் சிறைப்பட்டவர்களாய் எண்ணி அவர்களுக்கு ஆறுதல் அளிப்போம்.துன்புறுத்தப்படுகிறவர்களை மறவாமல் அவர்களுக்கு நம்மால் இயன்ற உதவிகளை செய்ய வேண்டும். பொருளாசையை விலக்கி நமக்கு உள்ளதே போதும் என்று நினைப்போம்.ஏனெனில் நம் ஆண்டவர் நான் ஒருபோதும் உன்னைக் கைவிட மாட்டேன்! உன்னை விட்டு விலகவும் மாட்டேன் என்று நமக்கு வாக்கு அருளியிருக்கிறார். ஆதலால் நாம் துணிவோடு
ஆண்டவரே எனக்கு துணை, நான் அஞ்ச மாட்டேன்:மனிதர் எனக்கு எதிராக என்ன செய்ய முடியும் என்று தைரியமாக இருக்கலாம்.

நமக்கு கடவுளின் வார்த்தையை எடுத்து சொன்னவர்களை மறவாமல் நினைவு கூர்ந்து அவர்களின் வாழ்வின் நிறைவை எண்ணிப்பார்த்து அவர்களைப்போல் நாமும் நம்பிக்கை உடையவர்களாய் இருப்போம். ஏனெனில் நிலையான நகர் நமக்கு இங்கே இல்லை. வரப்போகும் நகரையே நாம் நாடிச் செல்வோம்.ஆகவே அவர் வழியாக எப்போதும் கடவுளுக்கு நன்றிபலி செலுத்துவோம். அவருடைய பெயரை அறிக்கையிடுவதின் மூலம் அதன் வழியாக நாம் அவருக்கு புகழ்ச்சிபலி செலுத்துகிறவர்களாய் இருப்போம். நன்மை செய்யவும் எல்லோரிடமும் பகிர்ந்து வாழவும் கற்றுக்கொள்வோம்.

இப்படி நாம் ஒவ்வொரு காரியத்திலும் அவருக்கு ஏற்ற விதத்தில்அவர் விரும்பும் காரியங்களை செய்தால் அதுவே அவருக்கு உகந்த வாழ்க்கையாக இருக்கும். அனைத்திலும் நன்னடத்தை உள்ளவர்களாய் இருந்து ஆண்டவரின் சித்தத்தை நிறைவேற்றுவோம்.

அன்பின் பரலோக தந்தையே!!

உம்மை போற்றுகிறோம். நாங்கள் எல்லாவிதத்திலும் நீர் விரும்பும்படி உமக்கேற்ற உகந்த வாழ்க்கையை வாழ எங்களுக்கு போதித்து வழிநடத்தும். உமது வார்த்தையை தினமும் வாசித்து தியானித்து அதை செயலில் கடைப்பிடித்து வாழ உதவி செய்யும். நீர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராய் இருப்பதுபோல நாங்களும் உமது சித்தம் செய்து உமக்கே மகிமை சேர்க்க உதவியருளும். மீட்பர் இயேசுகிறிஸ்துவின் இன்ப நாமத்தில் வேண்டுகிறோம் நல்ல பிதாவே!

ஆமென்! அல்லேலூயா!!!

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.