கடவுளுடைய வார்த்தை உயிருள்ளது,ஆற்றல் வாய்ந்தது.எபிரெயர் 4-12

கர்த்தருக்குள் அன்பான சகோதரர், சகோதரிகளுக்கு நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் நல்வாழ்த்துக்கள்.

அன்பானவர்களே! இந்த நாளிலும் நமது தேவைகளை குறித்து கலங்கி நிற்கும் நமக்கு கடவுள் தமது வார்த்தையை அனுப்பி நம்முடைய எல்லா தேவைகளையும் நிறைவேற்ற வல்லவராய் இருக்கிறார். ஏற்ற நேரத்தில் நம்மை உயர்த்துவார்.நீங்கள் உங்கள் பணியில் ஒழுங்காக இருந்தும் உங்களுக்கு கிடைக்க வேண்டிய பதவி உயர்வு, அல்லது சம்பள உயர்வு கிடைக்கவில்லையே என்று மனம் கலங்கி தவிக்கிறீர்களா? கவலைப்படாதீர்கள். ஆண்டவர் சில சமயம் இரண்டு மடங்கு நன்மையை கொடுப்பதற்காக ஒரு மடங்கு நன்மையை கொடுக்க மாட்டார். அதனால் காலதாமதம் ஏற்படும். நாம் எந்த சூழ்நிலையிலும் நமது பொறுமையை இழந்துவிடாத படிக்கு ஆண்டவரிடம் முறுமுறுக்காமல் இருக்க வேண்டும்.

வேதத்தில் எஸ்தர் புத்தகத்தில் ஒரு சம்பவம் நமக்காக எழுதி வைக்கப்பட்டுள்ளது. மொர்தெகாய் என்பவர் அரச வாயிலில் பணிபுரிந்துக்கொண்டு இருந்தார். அந்த நாட்களில் பிகதான், தெரேசு என்ற
இருவர் மன்னர் அகாஸ்வேரைத் தாக்க சினங்கொண்டு அவரை தாக்க ஆலோசனை செய்தனர். இந்த காரியம் மொர்தெகாய்க்கு தெரிந்தது. உடனே அவர் அரசி எஸ்தரிடம் கூற, எஸ்தர் மொர்தெகயின் பெயரால் அதனை மன்னரிடம் அறிவித்தார். உடனே அந்த காரியம் புலனாய்வு செய்யப்பட, உண்மை வெளிப்பட்டது. அவர்கள் இருவரும் தூக்கிலிடப்பட்டனர். இந்த நிகழ்ச்சி மன்னர் முன்னிலையில் குறிப்பேட்டில் எழுதி வைக்கப்பட்டது. ஆனால் அதற்காக உடனே மொர்தெகாய்க்கு ஒன்றும் கிடைக்கவில்லை.

இப்படியாக சில மாதங்கள் கழித்து ஒருநாள் அரண்மனையில் நடந்த ஒரு சம்பவத்தின் காரணமாக மன்னருக்கு தூக்கம் வரவில்லை. அப்பொழுது மன்னர் அந்த குறிப்பேட்டை பார்த்து வாசிக்கும்படியான சூழ்னிலை வந்தது.அதை வாசித்த மன்னர் என் உயிரை காப்பாற்றிய மொர்தெகாய்க்கு வெகுமதி கொடுத்து விட்டீர்களா? என்று அரசபணியாளரிடம் வினவினார். அதற்கு அவர்கள் இல்லை அரசே என்று பதிலளித்தனர். அச்சமயத்தில் ஆமான் என்னும் பணியாளன் மொர்தெகாய்க்கு விரோதமாக எழும்பி அவரை கொன்றுபோட தீர்மானம் செய்து தூக்கு மரத்தை செய்து வைத்திருந்தான். மன்னரிடம் இன்று பேசி அவனை கொன்றுபோட சொல்லவேண்டும் என்று நினைத்தான்.

அந்த நாளில் தாமே அரசர் மொர்தெகாயின் நல்ல செயல்களுக்கு ஒன்றும் பரிசு தராத காரணத்தால் ஆமானிடம் ராஜா மரியாதை செய்ய நினைப்பவர்களுக்கு என்னென்ன செய்ய வேண்டும் என்று கேட்கிறார். ஆமானோ ராஜா நமக்குதான் மரியாதை செய்யப்போகிறார் என்று நினைத்து பெரிய பட்டியல் போடுகிறான். உடனே ராஜா நீ சொன்ன ஒரு மரியாதையும் குறையாமல் மொர்தெகாய்க்கு செய்யும்படி கட்டளையிடுகிறார். ராஜாவின் கட்டளைப்படி அவனுக்கு சகல மரியாதையும் செய்யப்படுகிறது. ஆமான் செய்த தூக்கு மரத்தில் அவனையே தூக்கி போடுகிறார்கள்.

பிரியமானவர்களே! மொர்தெகாய் செய்த செயலுக்கு உடனே நன்மை கிடைத்திருந்தால் அந்த நாளில் அவனுக்கு ராஜா ஏதாவது ஒரு நன்மையை மாத்திரம் செய்திருப்பார். ஆனால் கடவுள் அந்த
செயலை ராஜா மறக்கும்படி செய்து ஏற்ற நாளில் ஞாபகப்படுத்தி மொர்தெகாய்க்கு சகல மரியாதையும் செய்யப்பட்டு அதோடு இல்லாமல் தன்னுடைய யூதா குலம் முழுவதையும் காப்பாற்ற உதவி செய்கிறார். ஆகையால் நாமும் சில வேளைகளில் நமக்கு கிடைக்க வேண்டிய ஆசீர்வாதம் கிடைக்க வில்லையே என்று மனம் தளராமல் காத்திருப்போமானால் ஏற்ற வேளையில் ஏற்றநேரத்தில் நம்முடைய ஆண்டவர் அவருடைய வார்த்தையை அனுப்பி நம்மை இருமடங்கு ஆசீர்வாதத்தால் நிரப்புவார். நம்மை உயர்த்துவார்.ஏனெனில் கடவுளுடைய வார்த்தை உயிருள்ளது. ஆற்றல் வாய்ந்தது.

ஜெபம்

எங்களை நேசிக்கும் அருமை தந்தையே! உம்மை போற்றுகிறோம், புகழ்கிறோம், எந்த சூழ்நிலையிலும் சோர்ந்து போகாதபடிக்கு காத்துக்கொள்ளும். ஏற்ற நேரத்தில் நீர் உமது வார்த்தையை அனுப்பி எங்களை காத்துக்கொள்வதற்காய் உமக்கு நன்றி. உமது ஆலோசனைப்படி வாழ கிருபை அளித்தருளும். உமது சித்தம் செய்ய கற்றுத்தாரும். யாருடைய மனதையும் புண்படுத்தாமல் வாழ போதித்தருளும்,எ ங்கள் குற்றம்,குறைகளை மன்னியும். மீட்பர் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் வேண்டுகிறோம் நல்ல பிதாவே!ஆமென்!!அல்லேலூயா!!!.

You may also like...

Leave a Reply

%d bloggers like this: