கடவுள் அவரது அன்பினால் நமக்கு புத்துயிர் அளிப்பார்.செப்பனியா 3:17

அன்பார்ந்த சகோதர,சகோதரிகளே,நமது தேவனாகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் என் அன்பின் நல்வாழ்த்துக்கள்.

இந்த நாளிலும் சோர்ந்து போயிருக்கும் நம் ஒவ்வொருவருக்கும் நம் ஆண்டவர் தமது வார்த்தைகளை அனுப்பி நம்மை தேற்றி, ஆதரித்து கண்மணியைப்போல் காத்து, நமது பெலவீனத்தை எடுத்துபோட்டு அவரின் பெலத்தால் நம்மை நிரப்பி, நம் தேவைகள், ஏக்கங்கள் யாவையும் சந்தித்து கிருபையளிக்கிறார். நமக்கு எதிராக எழும்பும் எல்லாக்குற்றங்களில் இருந்தும் நம்மை விடுவிக்க நல்லவராகவும்,வல்லவராகவும் இருக்கிறார். ஆண்டவர் நமது தண்டனை தீர்ப்பை தள்ளி, நம் பகைவர்களை அப்புறப்படுத்தி, நம் நடுவில் இருக்கிறார். இனி எந்த தீங்கையும் காணாதபடிக்கு நம்மை ஆதரிக்கிறார். செப்பனியா 3:15.

நம்முடைய கடவுளாகிய ஆண்டவர் நம் நடுவில் இருந்து நமக்கு மீட்பு அளித்து நமது பெயரில் மகிழ்ந்து அவருடைய அன்பினால் நமக்கு புத்துயிர் அளித்து நம்மைக் குறித்து மகிழ்வார். இது எப்போது என்றால் நாம் அவர் விரும்பும் காரியங்களை செய்து அவரின் சித்தத்தை நிறைவேற்றினால் நமதுபேரில் அகமகிழ்வார். இயேசுகிறிஸ்து இந்த உலகில் வாழ்ந்த காலத்தில் ஒருநாள் அவரை நோக்கி ஒருவன் இதோ உம்முடைய தாயாரும், உம்முடைய சகோதரரும், உம்மோடே பேசவேண்டும் என்று வெளியே நிற்கிறார்கள் என்று சொன்னபொழுது அவனுக்கு மறுஉத்தரவாக, என் தாயார் யார்? என் சகோதரர் யார்? என்று சொல்லி தம்முடைய சீஷர்களுக்கு நேரே கையை நீட்டி இதோ என் தாயும், என் சகோதரரும் இவர்களே! பரலோகத்தில் இருக்கிற என் பிதாவின் சித்தப்படி செய்கிறவன் எவனோ, அவனே எனக்கு சகோதரனும், சகோதரியும், தாயுமாய் இருக்கிறார்கள் என்று சொன்னதாக மத்தேயு 12:47லிருந்து 50 வரை உள்ள வசனங்களில் வாசிக்கிறோம்.

அன்பானவர்களே!நாம் கடவுளிடம் இருந்து நிறைய காரியங்களை எதிபார்க்கும் பொழுது அவரின் சித்தப்படி செய்தோமானால் அவரும் நமது எல்லாத் தேவைகளையும், சந்தித்து செயல்படுத்தி, நம்மை ஆற்றி, தேற்றி நாம் விரும்பும் யாவையும், கொடுத்து நமது பெயரில் மகிழ்ந்து அவரின் அன்பினால் நமக்கு புத்துயிர் அளிக்கிறார். பால் மறந்த குழந்தையைப்போல் நாமும் அவர் மடியில் படுத்து அவரின் மனவிருப்பத்தை நிறைவேற்றுவோம். இதுவே இந்த தவக்காலத்தில் நாம் அவருக்கு செவிகொடுக்கும் உத்தம காரியமாய் விளங்கும், என்பதில் ஏதாவது ஐயமுண்டோ!!

ஜெபம்.

எங்கள் அன்பின் பரலோக தந்தையே! உம்மை போற்றுகிறோம், புகழ்கிறோம், உமது அன்பில் எங்களுக்கு புத்துயிர் அளிப்பதற்கு எங்களை தகுதிப்படுத்தும். எங்கள் பாவங்களை பாராமல் எங்கள்
குற்றம், குறைகளை மன்னித்து உமது இரத்தத்தால் கழுவி தூய்மைப்படுத்தி பாதுக்காத்தருளும். மனவிருப்பத்தையும், ஏக்கங்களையும் அறிந்திருக்கிற தேவனாய் இருக்கிறீர். உமக்கே மகிமை உண்டாக வாழ எங்களுக்கு போதித்து காத்து,வழிநடத்தும். மீட்பர் இயேசு கிறிஸ்துவின் இனிய நல்ல நாமத்தில் வேண்டுகிறோம், எங்கள் ஜீவனுள்ள பரலோக தந்தையே,ஆமென்!!அல்லேலூயா!!!.

You may also like...

Leave a Reply

%d bloggers like this: