கடவுள் ஒருவரே எல்லா மனிதர்களின் இருதயத்தை அறிந்தவர்.

அன்பும், பண்பும், பாசமும் நிறைந்த சகோதர, சகோதரிகளுக்கு, நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் என் அன்பின் நல்வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்த நாளிலும் நம்முடைய ஆண்டவராகிய தேவன் நம் ஒவ்வொருவரின் இருதயத்திலும் வாசம் செய்துக்கொண்டுதான் இருக்கிறார். இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் தேவனை தரிசிப்பார்கள் என்று வேதம் சொல்கிறது. நாம் இருதயத்தில் சுத்தம் உள்ளவர்களாய் வாழ்ந்தோமானால் ஆண்டவர் நம் இதயத்தில் வந்து தங்குவார். நாம் அவருடைய வழிகளில் எல்லாம் நடக்கிறதற்கு அவருடைய கற்பனைகளையும், கட்டளைகளையும், நியாங்களையும் கைக்கொண்டு நம்முடைய இதயத்தை அவரிடத்தில் சமர்ப்பிப்போம்.

ஆண்டவரே கடவுள்: வேறு எவரும் இல்லை என்று உலகில் வாழும் எல்லா மக்களும் அறிந்து கொள்ள வேண்டுமாய் மனிதனின் இதயத்தில் வாழ விரும்புகிறார். ஆனால் நாம் அவரை கண்டு கொள்ளாமல் நமது விருப்பப்படி நடந்தால் அவரும் நம்மை கண்டு கொள்ளாமல் இருப்பார். சிலவேளைகளில் கண்டித்து உணர்த்துவார். அப்பொழுதும் நம் இதயத்தை கடினப்படுத்துவோமானால்  அவர் நம்மை விட்டு விலகிடுவார். நமக்கு கிடைத்த பொக்கிஷத்தை நழுவ விடாமல் காத்துக்கொள்வோம்.

ஏனெனில் நமது இதயத்தில் எண்ணங்களும், சிந்தனைகளும் தோன்றுமுன்னே அவைகளை ஆராய்ந்து அறிந்து வைத்திருக்கிறார். பாவஞ்செய்யாத மனுஷன் இவ்வுலகத்தில் இல்லையே. நாம் யாவரும் பாவம் செய்து தேவனின் மகிமையை இழந்துவிட்டோம். ஆனாலும் நம் ஆண்டவர் அவருடைய இரத்தத்தை கொடுத்து நம்மை எல்லாம் மீட்டுள்ளார். அவர் ஒருவரே எல்லா மனுப்புத்திரரின் இருதயத்தையும் அறிந்தவராதலால் ஒவ்வொருவரின் இதயத்தையும் அறிந்திருக்கிறபடியே அவரவர் வழிகளுக்கு தக்கதாய் செய்து அவனவனுக்கு பலன் அளிக்கிறார். 1 அரசர்கள் 8:40.

நம்முடைய தேவனாகிய ஆண்டவர் நம்மை கைவிடாமலும், நம்மை நெகிழவிடாமலும், இருப்பதற்கு நாமும் தினமும் அவரை நம்பி, அவரையே போற்றி துதித்து அவரின் சித்தத்தை உணர்ந்து செயல்பட்டு நம்முடைய இருதயத்தில் வந்து தங்கும்படி அழைத்து அவரின் பாதம் பற்றிடுவோம். அப்பொழுது நம்முடைய எல்லா காரியங்களிலும் அவரே நம்முடன் கூட இருந்து ஆபத்துக்கு விலக்கி அவரது ஆவியானவரின் துணைக்கொண்டு காத்திடுவார். ஆவியானவர் இருக்கும் இடத்தில் நிச்சயம் விடுதலை உண்டு.

ஜெபம்

அன்பின் தெய்வமே, பூமி அனைத்திற்கும் ஆண்டவராகிய தேவரீர் உம்மை போற்றி உமது பாதத்தில் சரணடைகிறோம். நீரே எங்கள் ஒவ்வொருவரின் இருதயத்திலும் வந்து தங்கி வாசம் செய்கிற ஆண்டவர். எங்கள் இதயத்தை ஆராய்ந்து அறிந்து இருக்கிறீர். எந்த கெட்ட எண்ணங்களும் தோன்றாதபடிக்கு எங்கள் இருதயத்தை சுத்தம் செய்து அதினால் உம்மை தரிசிக்க உதவி செய்யும். எங்கள் விண்ணப்பத்தை கேட்டு எங்களை ஏற்றுக்கொண்டு எல்லாத் தீமைக்கும் விடுவித்து காத்தருளும். நீர் விரும்பும்படி வாழ்ந்து உமக்கே மகிமை உண்டு பண்ண உதவி செய்தருளும். துதி, கனம், மகிமை யாவும் உமக்கே செலுத்துகிறேன். ஆமென்!அல்லேலூயா!!.

You may also like...

Leave a Reply

%d bloggers like this: