கடவுள் தமது வார்த்தையை அனுப்பி நம்மை மீட்பார்.

கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் ஒவ்வொரு சகோதரர், சகோதரிகளுக்கு என் அன்பின் நல்வாழ்த்துக்கள்.

ஆண்டவராகிய இயேசு மார்ச் மாதம் முழுதும் நம்மோடு கூடவே இருந்த நம்மை எல்லாத் தீங்கிற்கும் விலக்கி காத்து ஒரு சேதமும் நம்மை தாக்காதபடிக்கு காத்து வந்திருக்கிறார். அவருக்கு நமது நன்றியை நம் உள்ளத்தின் ஆழத்தில் இருந்து தெரிவித்து,அவர் பாதம் பணிவோம். இதுபோல் வருகிற ஏப்ரலிலும் நம்மை காத்து வழிநடத்த வேண்டுமாய் அவரிடத்தில் கெஞ்சி மன்றாடுவோம்.ஏனெனில் நாம் ஒவ்வொரு நாளும் இந்த உலகில் வாழ்வது ஆண்டவரின் கிருபையே.நாம் செய்தி தாளில் வாசித்து பார்ப்போமானால் ஒருநாளில் எவ்வளவு விபத்து நடக்கிறது என்று நாம் யாவரும் அறிந்த ஓன்று. ஆனாலும் நமக்கு எந்த தீங்கும் ஏற்படாதபடிக்கு காத்து வந்த தேவனை மனதார ஸ்தோத்தரித்து நன்றிபலி ஏறெடுப்போம்.

நான் இன்று உயிரோடு இருப்பது ஆண்டவரின் மேலான கிருபையே. கடந்த மார்ச் 18ம் தேதி நான் என் கணவருடன் பைக்கில் சென்று கொன்று இருந்தேன். ஒரு நிமிஷத்தில் என்ன நடக்கிறது என்று
தெரியாத அளவு ஒரு பெரிய விபத்து நேரிட இருந்தது. அந்த நிமிஷத்தில் என் மனதில் இயேசப்பா இந்த இடத்தில் என் உயிர் போய்விடுமோ? அல்லது ஆஸ்பத்திரியில் இருக்கப்போகிறேனா? உமது
சித்தம் என்ன? என்று என்னனவோ தோன்றியது. என் கணவரும் இன்று நம் உயிர் போகப் போகிறது என்று நினைத்தாராம். நான் வீட்டில் இருந்து கிளம்பும்பொழுது ஆண்டவரே நான் போகும் பொழுதும் வரும் பொழுதும் நீரே என்னை காத்துக்கொள்ளும் என்று ஜெபித்து விட்டுத்தான் சென்றேன். என்ன ஆச்சரியம் என்றால் ஒரு சின்ன சேதம் கூட இல்லாமல் ஆண்டவர் எங்களை காத்தார். அதைப்பார்த்த யாவரும் ஆச்சரியப்பட்டார்கள். நம்முடைய காலங்கள் அவர் கரத்தில் உள்ளது. நம்மை அவர் உள்ளங்கையில் வரைந்து வைத்திருக்கிறார். அவருடைய பிள்ளைகளை ஒருபோதும் கைவிடவே மாட்டார். என்னைக் காத்த ஆண்டவர் உங்களையும் காப்பார்.  அவரிடத்தில் பட்சபாதம் இல்லை.

அன்பானவர்களே! நாம் ஒவ்வொருநாளும் காலையில் எழுந்து அவர் வார்த்தைகளை வாசித்து ஜெபித்துவிட்டு பின்பு நம்முடைய மற்ற காரியங்களை செய்வோம்.அப்பொழுது ஆண்டவர் தமது வார்த்தையை அனுப்பி நம்மை ஒரு தீங்கும் தொடாதபடிக்கு தமது தூதர்களை அனுப்பி நம் கால் கல்லில் இடறாதபடிக்கு காத்துக்கொள்வார். மத்தேயு 8ம் அதிகாரத்தில் நாம் ஒரு சம்பவத்தை வாசிக்கிறோம். நூற்றுவர் தலைவர் ஒருவர் இயேசுவிடம் உதவி வேண்டி வந்தார். ஐயா, என் பையன் முடக்கு வாதத்தால் மிகுந்த வேதனையுடன்  படுத்து கிடக்கிறான் என்றார். இயேசு அவரிடம் நான் வந்து அவனை குணமாக்குவேன் என்றார். அதற்கு அவர் மறுமொழியாக ஐயா, நீர் என் வீட்டில் அடியெடுத்து வைக்க நான் தகுதியற்றவன். ஆனால் நீர் ஒரு வார்த்தை மட்டும் சொல்லும். என் பையன் நலமடைவான் என்று சொல்கிறதாக வாசிக்கிறோம். அவருக்கு எத்தனை நம்பிக்கை, விசுவாசம் பாருங்கள். நாமும் அதேபோல் நம் எல்லா தேவைகளையும். ஆண்டவரிடத்தில் ஒப்புவித்து நீரே எங்கள் நம்பிக்கை, நீர் ஒரு வார்த்தை மட்டும் சொல்லும் என்று நம்முடைய அப்பாவிடம் கேட்டு எல்லா நன்மைகளையும் பெற்று இந்த மாதம் முழுதும் நமக்கு தேவையானவற்றை தரும்படி கேட்டு ஜெபித்து நம்முடைய ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்வோம்.

அப்பொழுது நம்முடைய ஆண்டவர் நம் ஜெபத்தை கேட்டு நாம் நினைப்பதற்கும், வேண்டிக் கொள்வதற்கும் அதிகமாகவே கொடுத்து நம்மை ஆசீர்வதிப்பார். அவருடைய வார்த்தையில் வல்லமை உண்டு. மகத்துவம் உண்டு. அது தான் செய்ய நினைத்தை செய்தே தீரும் வெறுமனே ஆண்டவரிடம் மறுபடியும் போகாது. நம்முடைய நம்பிக்கை நம்மை கைவிடவே விடாது.விண்ணையும், மண்ணையும் உருவாக்கிய ஆண்டவரிடம் இருந்து நமக்கு உதவி வரும். நம்மை காப்பவர் தூங்குவதே இல்லை.நமது வலப்பக்கம் இருக்கிறார். நமக்கு நிழலாய் இருந்தும் காப்பார்.நாம் போகும்போதும் வரும் போதும் காப்பார் என்று திருப்பாடல்கள் 121ல் வாசிக்கலாம்.

ஜெபம்.

அன்பே உருவான இறைவா!உம்மையே போற்றுகிறோம், புகழ்கிறோம் நீர் இன்றி எங்களுக்கு வாழ்வேது? எங்கள் தாயின் கருவில் உருவானது முதல் நீரே எங்களை அறிந்து உள்ள தேவன். எங்கள் தேவைகள் யாவும் உமக்கு தெரியும். நாங்கள் எந்த சூழ்நிலையிலும் விழுந்து போகாதபடிக்கு காத்துக்கொள்ளும். இந்த மார்ச் மாதம் முழுதும் நீர் எங்களுடன் கூடவே இருந்து வழிநடத்தி காத்ததுபோல ஏப்ரல் மாதத்திலும் எங்களுடன் கூடவே இருந்து காத்துக்கொள்ளும். நாங்கள் தெரிந்தோ, தெரியாமலோ செய்யும் குற்றங்களையும் பாவங்களையும் மன்னித்து எங்களை ஒவ்வொருநாளும் நல்வழிப்படுத்தி போதித்து எங்கள்மேல் உமது கண்ணை வைத்து எங்களுக்கு ஆலோசனை வழங்கி உமது சித்தத்தின்படியே அரவணைத்துக் காப்பாற்றும்.நாங்கள் யாரிடம் போவோம்? உம்மிடமே எங்களை ஒப்புக்கொடுக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே! ஆமென்!! அல்லேலூயா!!!

(Written by : Sara, MyGreatMaster.com)

You may also like...

Leave a Reply

%d bloggers like this: